புத்ராஜெயா, 10/10/2024 : பினாங்கு துறைமுகத்திற்கு வந்திருக்கும் சீனாவைச் சேர்ந்த இரண்டு பயிற்சி கப்பல்கள் நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
ஏனெனில், விஸ்மா புத்ராவால் நிர்வகிக்கப்படும் நெறிமுறையைப் பின்பற்றி அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
அக்கப்பல்களின் வருகை, வெளியுறவு அமைச்சின் அதிகாரப்பூர்வ அனுமதியைப் பெற்றிருப்பதோடு தற்காப்பு அமைச்சும் அதனை அறிந்திருப்பதாக ஃபஹ்மி குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா போன்ற சில நாடுகளின் போர் கப்பல்கள், வேறு இடங்களுக்கு செல்லும்போது மலேசியாவில் உள்ள துறைமுகங்களில் நிறுத்துவது வழக்கமான ஒன்று என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.
மலேசியா பல நாடுகளுடன் அரசதந்திர உறவைக் கொண்டுள்ளதால் அந்நாடுகளின் போர் கப்பல்கள் இங்குள்ள துறைமுகங்களில் நிறுத்தப்படுவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருவழி உறவு வலுப்படுத்துகிறது.
“ஒவ்வொரு முறையும் அந்நிய நாட்டின் போர் கப்பல்கள் நம் நாட்டில் நங்கூரமிடும்போது, நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த சில சமூக நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்வர். நாம் பல நாடுகளுடன் சிறந்த அரசதந்திர உறவைக் கொண்டுள்ளோம். மலேசியாவில் உள்ள துறைமுகங்களில் தற்காலிகமாக நங்கூரமிடுவது நடப்பில் இருக்கும் நெறிமுறையைப் பின்பற்றி செய்யப்படுகிறது. இது இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. போர் கப்பல்கள் ஓரிடத்தில் இருந்து மற்ற இடங்களுக்குப் பயணிக்கும். விஸ்மா புத்ராவின் நெறிமுறைகளுக்கு ஏற்றே அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது”, என்று அவர் கூறினார்.
அக்கப்பல்களில் வருகையை இனவாத உணர்வையும் வெறுப்பையும் வேண்டுமென்றே தொடர்புபடுத்திய இணையவாசிகளின் நடவடிக்கை வருத்தமளிப்பதாக ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் பேச்சாளருமான ஃபஹ்மி சுட்டிக்காட்டினார்.
Source : Bernama
#ChinaWarShips
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia