கோலாலம்பூர், 08/10/2024 : அடுத்த ஆண்டு தொடங்கி நடைமுறைப் படுத்தவிருக்கும் புதிய கல்வி திட்டத்தை நன்கு உள்வாங்கி, சிறப்பான முறையில் மாணவர்களுக்குக் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையை வழங்க பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர்.
குறிப்பாக, சீனம் மற்றும் தமிழ்மொழி பாடங்களுக்கு அதிகமான ஆசிரியர்கள் கல்வி அமைச்சின் மூலம் பயிற்சி பெற்று சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பப்படுவதன் மூலம் பல்வேறு நன்மைகளை அடைய முடியும் என்கிறார் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக் கழகம், உப்சியின் மூத்த விரிவுரையாளர் முனைவர் இளங்குமரன் சிவநாதன்.
ஆசிரியர் பயிற்சி கழகங்களில் தேசிய மொழியைத் தவிர்த்து சீன மற்றும் தமிழ் மொழிப் பயிற்சிகளுக்கும் கூடுதல் இடம் அதிகரிக்கப்படுவதற்கு, அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதை பெரிதும் வரவேற்பதாக முனைவர் இளங்குமரன் தெரிவித்தார்.
தமிழ்ப்பள்ளிகளில், குறிப்பிட்ட சில பாடங்களை மாணவர்களுக்குப் போதிக்க, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இன்னும் பற்றாக்குறையாகவே இருப்பதால் இம்முயற்சி அந்தக் குறையை நிவர்த்தி செய்ய உறுதுணையாக இருக்கும் என்று அவர் விவரித்தார்.
”இது ஒரு சிறப்பான் முன்னெடுப்பாகும். ஏனெனில், தமிழ்ப்பள்ளிகளில் பல இடங்களில் குறிப்பிட்ட பல பாடங்களுக்குப் பிரத்தியேகமாக பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கான காலி இடங்கள் இன்னும் இருக்கவே செய்கின்றன. அவற்றை நிவர்த்தி செய்வதற்கு இது ஒரு சிறந்த முன்னெடுப்பாக நான் பார்க்கிறேன். இன்னும் அதிகமான மாணவர்கள் ஆசிரியர் துறையைத் தேர்ந்தெடுக்க உந்துதலாகவும் இது விளங்குகின்றது”, என்றார் அவர்.
அதேவேளையில், ஆரம்பப் பள்ளியில் தமிழ்மொழியை நன்கு கற்று தேர்ந்த மாணவர்கள், அதனை இடைநிலைப்பள்ளியில் தொடர்வதற்குப் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வரும் நிலையில், அதற்கு தீர்வாகவும் இம்முயற்சி அமையும் என்று இளங்குமரன் குறிப்பிட்டார்.
இந்நிலையில், அரசாங்கத்தின் இம்முயற்சி குறித்து கூடிய விரைவில் தெளிவான விளக்கத்தைக் கல்வி அமைச்சு வழங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
”ஆரம்ப பள்ளிக்குப் பிறகு இடைநிலைப்பள்ளிகளில் நம் மாணவர்கள் தமிழ்மொழியைக் கற்று தேர்வதற்குச் சில சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன. அதற்கும் கூட இது ஒரு தீர்வாக அமையக்கூடும். எப்படி இருந்தாலும் பிரதமரின் இந்த அறிவிப்பு குறித்து கூடிய விரைவில் கல்வி அமைச்சு தெளிவான விளக்கத்தையும் வழிகாட்டியையும் வழங்கும். அதன் அடிப்படையில் சமுதாயமும் மாணவர்களும் இந்த அறிவிப்பின் வழி பயன்பெற முடியும்”, என்று அவர் தெரிவித்தார்.
எனவே, அரசாங்கம் அவ்வப்போது வழங்கி வரும் இதுபோன்ற திட்டங்களை இந்திய சமுதாயம் நன்கு பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்று அவர் விளக்கினார்.
ஆசிரியர் பயிற்சி கழகங்களில் தேசிய மொழியைத் தவிர்த்து சீன மற்றும் தமிழ் மொழிப் பயிற்சிகளுக்கும் கூடுதல் இடம் அதிகரிக்கப்படுவதற்கு, அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருந்தார்.
சம்பந்தப்பட்ட அப்பாடங்களுக்காக அதிகமான ஆசிரியர்கள் கல்வி அமைச்சினால் பயிற்சி பெற்று தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளுக்கு அனுப்பப்படலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.
Source : Bernama
#Teachers
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia