தேசிய அளவிலான மாநிலங்களுக்கு இடையிலான கபடிப் போட்டி – கூட்டரசு பிரதேச பெண்கள் அணியும் கெடா ஆண்கள் அணியும் வெற்றி

தேசிய அளவிலான மாநிலங்களுக்கு இடையிலான கபடிப் போட்டி - கூட்டரசு பிரதேச பெண்கள் அணியும் கெடா ஆண்கள் அணியும் வெற்றி

கெடா, 08/10/2024 : பினாங்கு மாநில இந்தியர் திரைப்படச் சங்கம் ஏற்பாட்டில் டிரீம் ஸ்கை ஹோம் புரொடக்‌ஷன் மற்றும் கெடா மாநிலக் கபடிக் கழகம் ஆதரவில் தேசிய அளவிலான மாநிலங்களுக்கு இடையிலான கபடிப் போட்டி 2024 05/10/2024 அன்று மின் தெர்க் மண்டபம், சுங்கைப் பட்டாணி, கெடாவில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இந்தக் கபடிப் போட்டி விளையாட்டுக்குச் சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு மலேசிய ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் செனட்டர் திருமதி. சரஸ்வதி கந்தசாமி அவர்களும், நாடறிந்த கொடை நெஞ்சர் தொழில் அதிபர் மேதகு திரு. “சிங்கப்பூர்” சின்னையா நாயுடு அவர்களும் கலந்து கொண்டனர்.

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கெடா மாநில இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறையின் துணை இயக்குநர் திரு. முகமது ஹனாஃபி பின் ஏ.ரஹ்மான் அவர்கள் தனது வாழ்த்துரையை வழங்கினார்.

இந்தக் கபடிப் போட்டியில் நாடளவிலான 12 அணிகள் களம் கண்டன. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் போட்டிகள் தனித் தனியாக நடைபெற்றன.

பெண்கள் பிரிவில் கூட்டரசு பிரதேசம் அணி முதலாம் இடத்தையும், நெகிரி செம்பிலான் இரண்டாம் இடத்தையும் மூன்றாம் இடத்தை கெடா மற்றும் கிள்ளாந்தான் அணிகள் கூட்டாகவும் பிடித்தன.

ஆண்கள் பிரிவில் கெடா அணியும், இரண்டாம் இடத்தை கூட்டரசு பிரதேச அணியும் மூன்றாம் இடத்தை பினாங்கு மற்றும் மலாக்கா அணிகள் கூட்டாக மூன்றாம் இடத்தை பிடித்தன.

செனட்டர் திருமதி. சரஸ்வதி கந்தசாமி மற்றும் திரு சின்னையா அவர்களும் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான கெடா மாநிலக் கபடிக் கழகத்தின் தலைவர் திரு. சதாசிவம் அவர்களும் அவர்தம் நிர்வாக உறுப்பினர்களும், பினாங்கு மாநில இந்தியர் திரைப்படச் சங்கத்தின் தலைவர் திரு. இல.விக்னேஷ் பிரபுவும் இந்த கபடிப் போட்டி சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் மற்றும் கலந்து கொண்ட பொது மக்களுக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

போட்டிகளை என் தமிழ் ஊடகம் பேஸ்புக் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்தது.

#Kabaddi2024
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.