புத்ராஜெயா, 08/10/2024 : அக்டோபர் 14-ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் சட்ட மசோதா மற்றும் தீர்மானங்கள் தொடர்பான முழுமையான தயார்நிலை நடவடிக்கைகளை அமைச்சர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
2025-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அக்டோபர் 18-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் வேளையில், இன்று அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியப் பிரதமர் இதன் தொடர்பில் வலியுறுத்தியதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
“…மேலும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தயார்நிலை குறித்த பல அம்சங்கள் எழுப்பப்பட்டன. குறிப்பாக, அமைச்சர்கள் மத்தியில் கேள்விகளுக்கு நன்கு பதிலளிப்பதற்கான முயற்சிகளும், கலந்துரையாட மற்றும் விவாதிக்கக்கூடிய சாத்தியம் உள்ள பல சட்ட மசோதாக்கள் மற்றும் தீர்மானங்கள் குறித்து தாக்கல் செய்வதற்கான தயார்நிலை குறித்தும் உறுதிசெய்யப்படும்”, என்று அவர் கூறினார்.
இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஃபஹ்மி இதனைத் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்திலேயே அதன் தொடர்பிலான தகவல்கள் தெரிய வரும் என்று அவர் குறிப்பிட்டார்.
2025-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அக்டோபர் 18-ஆம் தேதி மக்களவையில் “மடானி பொருளாதாரம், வளமான நாடு, சுபீட்சமான மக்கள்” என்ற கருப்பொருளில் தாக்கல் செய்யப்படும்.
Source : Bernama
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia