புத்ராஜெயா, 07/10/2024 : பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும் சீன உயர்மட்ட தலைமைத்துவத்திற்கும் இடையில் உள்ள நல்லுறவு நாட்டின் டிவெட் எனப்படும் தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில் பயிற்சி திட்டத்திற்கு நேர்மறையானத் தாக்கத்தை அளிக்கும்.
அடுத்த ஆண்டில் சீனா, மலேசியா-சீன இளைஞர்-டிவெட் பயிற்சி, MCYTT திட்ட பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று துணை பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிடி ஹமிடி நம்பிக்கை தெரிவித்தார்.
“பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் சீனப் பிரதமர் லீ சாங் மற்றும் அந்நாட்டு அதிபர் யீ உடனான நல்லுறவில் எனக்கு நம்பிக்கை உள்ளது. அடுத்த ஆண்டில் இந்த டிவெட்டில் இணையும் நமது மாணவர்களின் எண்ணிக்கையை அவர்கள் அதிகரிப்பார்கள்,” என்றார் அவர்.
இன்று, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், சீனா மலேசியா-சீன இளைஞர்-டிவெட் பயிற்சி, MCYTT-இல் பங்கேற்கும் மாணவர்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றும்போது டாக்டர் சாஹிட் அவ்வாறு குறிப்பிட்டார்.
தொடக்கத்தில் சீன அரசாங்கம் அந்நாட்டிலுள்ள 225 டிவெட் கழகங்களில் 3,125 மலேசிய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கியது.
எனினும், கடந்த ஜூலை மாதம் தாம் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட பின்னர், மேலும் 2,000 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு அதன் மொத்த எண்ணிக்கை 5,125ஆக அதிகரித்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
Source : Bernama
#TVET
#China
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia