அலோஸ்டார், 30/09/2024 : இன்று மதியம் 4 மணி வரை கெடாவில் 444 குடும்பங்களைச் சேர்ந்த 1,384 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கை, காலையில் இருந்த 436 குடும்பங்களைச் சேர்ந்த 1,359 பேரைக் காட்டிலும் அதிகரித்துள்ளது.
குபாங் பாசுவில் ஒரு தற்காலிக நிவாரண மையம் மூடப்பட்டுள்ள வேளையில், எஞ்சிய பத்து தற்காலிக நிவாரண மையங்கள் இன்னும் செயல்பட்டுக் கொண்டிருப்பதை, சமூக நலத்துறை, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
பொக்கோக் செனா மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதில், டேசா கெடா டெராங், மஹாட் தர்பியா இஸ்லாமியா டெராங், பொக்கோக் செனா மண்டபம், புக்கிட் ஹிஜாவ் முகிம் டெராங் தேசிய பள்ளி மற்றும் கம்போங் பாரு ஜாலான் லம்பாம் பள்ளிவாசல் ஆகிய இடங்களில் உள்ள தற்காலிக நிவாரண மையங்களில் 233 குடும்பங்களைச் சேர்ந்த 737 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.
கோத்த செத்தாரில், தித்தி காஜா தேசிய பள்ளி, கெப்பாலா பாத்தாஸ் இடைநிலைப்பள்ளி, அலோர் மெரா இடைநிலைப்பள்ளியில் 129 குடும்பங்களைச் சேர்ந்த 411 பேர் தங்க வைப்பட்டுள்ளனர்.
குபாங் பாசுவில் லுபோக் பத்து மண்டபம் மற்றும் பண்டார் பாரு டாருல் அமான் தேசிய பள்ளியில் 82 குடும்பங்களைச் சேர்ந்த 236 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.
இதனிடையே மதியம் 4 மணி வரையில், குபாங் பாசு, கெப்பாலா பாத்தாசில் உள்ள பாடாங் தெராப் ஆற்றின் நீர்மட்டம் 9.14 மீட்டர் அபாய அளவை விட 9.17 மீட்டர் உயரத்திலும், சுங்கை பாதாவில் 3.8 மீட்டரை விட 4.15 மீட்டர் உயரத்தில் பதிவாகியுள்ளதை, நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை தனது அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் வெளியிட்டிருந்தது.
Source : Bernama
#KedahFloods
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia