EIP எனப்படும் இந்திய வர்த்தகர்கள் மேம்பாட்டு திட்டம் அறிமுகம்

EIP எனப்படும் இந்திய வர்த்தகர்கள் மேம்பாட்டு திட்டம் அறிமுகம்

கோலாலம்பூர், 28/09/2024 : ஸ்பூமி கோஸ் பிக், பெண் மற்றும் பிரிவ்-ஐ போன்ற கடனுதவி மற்றும் உதவித் தொகை திட்டங்களின் மூலம் இந்திய தொழில்முனைவோர் அடைந்து வரும் கணிசமான வளர்ச்சியைத் தொடர்ந்து, இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்த, வணக்கம் மடானியின் கீழ் Empowering Indian Entrepreneurs, EIP எனப்படும் இந்திய வர்த்தகர்கள் மேம்பாட்டு திட்டத்தை கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று அறிமுகப்படுத்தினார்.

மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம், மைக்கியுடன் இணைந்து இத்திட்டத்தின் கீழ் இந்திய வர்த்தகர்களின் மேம்பாட்டிற்காக பல திட்டங்களை மேற்கொள்ளவிருப்பதாக, டத்தோ ஶ்ரீ ரமணன் தெரிவித்தார்.

”இந்த திட்டம் பார்த்தீர்கள் என்றால் மைக்கி ஆயிரக்கணக்கில் வர்த்தகங்கள் வைத்திருக்கிறார்கள். வர்த்தக பங்காளிகள் வைத்திருக்கிறார்கள், வர்த்தகர்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களின் நிறுவனம் உட்பட தொழிலாளர்களை அடுத்த கட்டத்திற்கு, அவர்களும் புதிய வர்த்தகத்தை உருவாக்க அவர்களுக்கு என்ன தேவை. எப்படி பொருளாதார ரீதியிலான அறிக்கைகளை எவ்வாறு தயார்படுத்துவது, ஏஐ தொடர்பான விவகாரங்களை எவ்வாறு கையாள்வது குறித்த பல நிறுவனங்களின் மூலம் அவர்களுக்குப் பயிற்சிகளை வழங்குவோம்”, என்று அவர் கூறினார்.

மேலும், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் உள்ள ஒருமைப்பாட்டு அரசாங்கம் நாட்டின் இந்திய சமுதாயத்திற்காக இதுவரை 13 கோடியே 60 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு வழங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டிய ரமணன், இந்திய சமுதாயத்தின் நலனில் அக்கறை கொள்ளாதது போல் அரசாங்கத்தையும் பிரதமரையும் விமர்சித்து எழும் சிலரின் சர்ச்சை பேச்சுகள் குறித்தும் சாடினார்.

”இன்றைக்கு இத்தனை விஷயங்கள் நாங்கள் சொல்லியிருக்கிறோம். அமானா இக்தியார், தெக்குன், பெண், SME Corp மூலமாக நமது சமுதாயத்தில் பத்தாயிரம் பேருக்கு மேல் அதன் நன்மைகளை அடைந்திருக்கிறார்கள். ஆனால், இன்னும் சிலர் என்ன யோசிக்கிறார்கள் எனக்கு புரியவில்லை. டத்தோ ஶ்ரீ அன்வார், இந்திய சமுதாயத்திற்கு ஒன்றும் செய்யவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். பிரதமர் நம்முடைய சமுதாயத்தைக் கண்டுக் கொள்ளவில்லை. இம்மாதிரியான அனைத்து திட்டங்களையும் செய்தும், இன்னும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்”, என்றார் அவர்.

இன்று, கோலாலம்பூர் சென்ட்ரலில் மைக்கியின், 73-ஆவது பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரமணன் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

Source : Bernama

#MalaysiaNews
#LatestNews
#Malaysia
#EIP
#Entamizh

Comments are closed, but trackbacks and pingbacks are open.