பிரதமர்மோடி – ராணுவ தளபதி சந்திப்பு; எல்லை விவகாரம் குறித்து ஆலோசனை

பிரதமர்மோடி - ராணுவ தளபதி சந்திப்பு; எல்லை விவகாரம் குறித்து ஆலோசனை

bjp

புதுடில்லி: இந்திய – பாக்., எல்லையில் இன்று நடந்த தாக்குதல் தொடர்பாக ஏற்பட்டுள்ள நிலை குறித்து பிரதமர் மோடியை சந்தித்து ராணுவ தளபதி பிக்ராம்சிங் விளக்கினார். மேலும் பாதுகாப்பு துறை அதிகாரிகளிடமும் பிரதமர் மோடி எடுத்த, எடுக்கப்பட வேண்டிய விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். இன்று காலையில் இந்திய – பாக்., எல்லையில் ரஜோரி, பூஞ்ச் (காஷ்மீர் ) பகுதியில் பாக்., படையினர் இந்திய எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒருவர் பலியானார். 3 பேர் படுகாயமடைந்தனர்.



இந்த சந்திப்பில் உள்நாட்டு பாதுகாப்பு நிலை மற்றும் எல்லையில் ஏற்பட்டுள்ள நிலைகள் குறித்து ராணுவ தளபதி பிக்ராம்சிங்கிடம் கேட்றிந்தார். 3 மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. பிரதமர் மோடி பதவியேற்ற பின்னர் முதன்முதலாக ராணுவ தளபதியுடன் இந்த சந்திப்பு நடந்தது. பிரதமர் மோடி தளபதிக்கு சில யோசனைகளை கூறியுள்ளார். வட கிழக்கு மாநிலங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.



பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப் அனுப்பிய கடிதத்திற்கு பிரதமர் மோடி இன்று பதில் கடிதம் அனுப்பினார். இதில் தாங்கள் விரும்பியபடி இருநாட்டு வளர்ச்சிக்கு இணைந்து செயலாற்றுவோம் என்று கூறியுள்ளார்.


பாகிஸ்தான் தாக்குதலுக்கு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.