ஈப்போ, 22/09/2024 : நாடு தழுவிய அளவில் இந்தியர்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் 167 பாலர் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான முழு கல்வி உதவிகளை இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ராவே வழங்கும் என்பதால் பெற்றோர் மற்றும் பாதுகாவலரிடமிருந்து பாலர் பள்ளி நிர்வாகம் எந்தவொரு கட்டணத்தையும் விதிக்கக் கூடாது என்று மித்ராவின் சிறப்பு செயற்குழு தலைவர் பிரபாகரன் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.
“நிதி உதவிப் பெறும் பாலர் பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்கள் அனைவரும் தமிழ்ப்பள்ளியில் பதிவு செய்வதையும் உறுதி செய்ய வேண்டும். அதில் பயிலும் ஒரு மாணவர் கூட மற்ற பள்ளிகளில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கினால் அப்பாலர் பள்ளி கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு அடுத்தாண்டுக்கு அதற்கு நிதி வழங்கப்படாது. ஏனெனில் இது அரசாங்கம் வழங்கும் நிதி. அந்நிதி முறையாக விநியோகிக்கப்பட இத்தகைய சில விதிமுறைகள் அவசியமானவை,” என்று அவர் கூறினார்.
அதேவேளையில், எந்தவோர் அரசாங்க சார்பற்ற இயக்கங்களையும் இடைத்தரகராக நியமித்து, இந்நிதியை ஒப்படைக்க மித்ரா விருப்பம் கொள்ளாததால், அந்தந்த பாலர் பள்ளிகளுக்கு நேரடியாகவே இந்நிதி விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
“இந்நிதி நேரடியாக பாலர் பள்ளிக்கு வழங்கப்படும். மாணவர்களின் பெயர்ப் பட்டியலை பள்ளி நிர்வாகம் எங்களிடம் வழங்குவர். மாநில அரசாங்கத்தின் அனுமதி உட்பட அனைத்து பெர்மிட்டுகளும் அவர்களிடம் முறையாக இருக்க வேண்டும். மேலும் கல்வியமைச்சின் அங்கீகாரமும் இருத்தல் அவசியமாகும். அப்போதுதான் இதை ஒரு முழு பாலர் பள்ளியாக கருத முடியும். அதேவேளையில் அவர்கள் கற்றுத் தரும் பாடங்களும் கல்வியமைச்சால் கண்காணிக்கப்படும் அதேவேளையில் அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள் மூலமாக இந்நிதி பாலர் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும் நடவடிக்கை திருப்தியளிக்கவில்லை,” என்றார் அவர்.
ஏனெனில் கடந்த காலங்களில் அரசாங்க சார்பற்ற இயங்கள் மூலமாக சில பயிற்சித் திட்டங்களுக்கு வழங்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளது ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மித்ரா இம்முடிவெடுத்துள்ளதாகவும் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமாகிய பிரபாகரன் விவரித்தார்.
இதனிடையே, மாநிலங்களில் மித்ராவுக்கான ஒருங்கிணைப்பாளரை நியமிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இந்நிலையில், பேராக் மாநில ஒருங்கிணப்பாளராக புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரபாகரன் கூறினார்.
இன்று மாநில அரசாங்க செயலகத்தில் நடைபெற்ற மித்ரா தொடர்பான விளக்க கூட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் அவர் அத்தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
Source : Bernama
#Mitra
#PPrabakaran
#MalaysiaNews
#LatestNews
#Malaysia