நேபாளிகளை கவர்ந்த மோடியின் உரை: உள்ளூர் பத்திரிகை மனம் திறந்த பாராட்டு

நேபாளிகளை கவர்ந்த மோடியின் உரை: உள்ளூர் பத்திரிகை மனம் திறந்த பாராட்டு

pm-modi-nepal-parliament-address-360

காத்மாண்டு: நேபாள பார்லிமென்ட்டில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஆற்றிய உரையின் மூலம், லட்சக்கணக்கான நேபாள மக்களின் உள்ளங்களை அவர் கவர்ந்து வி்ட்டார் என, நேபாள பத்திரிகை ஒன்று பாராட்டி உள்ளது.
இரண்டு நாள் பயணமாக நேபாளம் சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி, அங்குள்ள பார்லிமென்ட்டில் உரையாற்றினார். இதன் மூலம், அந்நாட்டு பார்லிமென்ட்டில் உரையாற்றிய முதல் வௌிநாட்டு தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மோடி ஆற்றிய உணர்ச்சிப் பெருக்கான உரையை, நேபாள நாட்டின் இ கந்திபூர் என்ற பத்திரிகை வெகுவாக பாராட்டி உள்ளது.
மோடியின் பேச்சு குறித்த அப்பத்திரிகையின் செய்தியில், ‘மிகச் சிறந்த தலைமைப் பண்புடன் கூடியதாக மோடியின் பேச்சு அமைந்திருந்தது. கலாசாரம் மற்றும் அரசியல் ஆகியவை குறித்து நேபாளிகளின் மனங்களை உருக்கி, உணர்ச்சிவசப்பட வைக்கும் வகையில் இந்திய பிரதமரின் பேச்சு அமைந்திருந்தது,’ என்று கூறப்பட்டுள்ளது.
மோடி உரை குறித்து அந்த பத்திரிகை மேலும் குறிப்பிடுகையில், ‘புத்தர் இந்தியாவில் தான் பிறந்தார் என்ற சர்ச்சை நீடித்து வரும் நிலையில், அவர் நேபாளத்தில் தான் பிறந்தார் என மோடி கூறினார். இதை பார்லிமென்ட் உறுப்பினர்கள் அனைவரும் கைதட்டி வரவேற்றனர்,’ என்று தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி தனது உரையில், ‘புல்லட் (துப்பாக்கி கலாசாரம்) முறையில் இருந்து பேலட் (ஜனநாயகம்) முறைக்கு மாறியதற்காக நேபாள நாட்டை பாராட்டுகிறேன் என்றார். கடந்த 2006ம் ஆண்டு நேபாளத்தில் மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கி முனையில் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். பி்னனர் அவர்கள் ஜனநாயக பாதைக்கு திரும்பி, தேர்தலில் பங்கு கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நேபாளத்தில் உள்ள பசுபதிநாதர் கோவிலுக்கு சென்ற நரேந்திரமோடி, அக்கோவிலுக்கு 2500 கிலோ எடை கொண்ட சந்தன கட்டைகளை வழங்கி, வழிபட்டார் . மொத்தத்தில், அண்டை நாடுகளை ஒருங்கிணைத்து, இந்திய துணைக்கண்டத்தில் அமைதியை நிலை நாட்டும் முயற்சியாக மோடியின் நேபாள பயணம் அமைந்துள்ளது.