67வது சுதந்திரத் தினத்தைத் தேசிய அடையாளமாகக் கொண்டாடுவோம் – மோகனன் பெருமாள் வேண்டுகோள்.

67வது சுதந்திரத் தினத்தைத் தேசிய அடையாளமாகக் கொண்டாடுவோம் - மோகனன் பெருமாள் வேண்டுகோள்.

கோலாலம்பூர், 30/08/2024 : டேவான் பஹாசா டான் புஸ்தாகா, தேசிய நூலகத்தை உள்ளடக்கிய ஒற்றுமைத் துறை அமைச்சகத்துடன் அணுக்கமான தொடர்புகளை வலுப்படுத்தி, தேசிய நீரோட்டத்தில் கலப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், இனி சங்கம் ஏற்பாடு செய்யும் எல்லா நிகழ்ச்சிகளிலும் முதலில் தேசியக் கீதமான “நெகாராகூ” வும் தமிழ் வாழ்த்தும் இடம் பெறுவதை உறுதி செய்யும் என்று அதன் தலைவர் மோகனன் பெருமாள் குறிப்பிட்டார்.

தேசியக் கீதத்தைத் தொடர்ந்து சங்கம் தயாரிப்பிலான தமிழ் வாழ்த்து ஒலிக்கும்.

சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகளின் நிகழ்ச்சி நிரலிலும் முதல் அங்கமாக “நெகாராகூ” தேசியக் கீதம் ஒலிக்கும், அதனைத் தொடர்ந்து சங்கத்தின் ஏற்பாட்டில் கவிஞர் சீனிநைனா முகமது அவர்கள் எழுதி, ஆர்.பி.எஸ்.ராஜு இசையமைத்து, பாடகர் துருவன் பாடி, பாடலாகப் பதிவு செய்யப்பட்டு சங்கம் வெளியீடு செய்த “காப்பியனை ஈன்றவளே” எனத் தொடங்கும் தமிழ் வாழ்த்துப் பாடல் இடம் பெறும்.

இந்தக் குறியீட்டு மாற்றம் மலேசியச் சமூகத்தில் ஒற்றுமை மற்றும் தேசிய அடையாளத்தை வளர்ப்பதற்கான சங்கத்தின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கும்.

சங்கம் வரலாற்று ரீதியாக தனது நிகழ்ச்சிகளைத் தமிழ் வாழ்த்துடன் தொடங்கும்.

இனி தேசியக் கீதத்துடன் தொடங்குவது மலேசியத் தமிழ் எழுத்தாளர்களைத் தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் முயற்சிகளின் அடையாளமாக திகழும்.

தேசிய இலக்கியத் துறையில் உரிய அங்கீகாரம் பெறும் இலக்கை நோக்கி, சங்கம் டேவான் பாஹாசா டான் புஸ்தகா, ஒற்றுமைத்துறை அமைச்சகத்துடன் பணி உறவை வலுப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஏற்ப, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று மோகனன் பெருமாள் குறிப்பிட்டார்.

இளையத் தலைமுறை இலக்கு.

இவ்வாண்டு மே மாதம் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற மோகனன் பெருமாள் சங்கத்தில் இளையத் தலைமுறை எழுத்தாளர்களை அதிகமாக இணைக்க வேண்டும் என்ற நோக்கில் இரண்டு சட்டத் திட்டங்களை அறிமுகம் செய்தார்.

சங்கத்தில் இணையும் இளையத் தலைமுறை எழுத்தாளர்கள் நாட்டுப்பற்று, மொழி, கலை, கலாச்சாரப் பாரம்பரியம் ஆகியவற்றின் மீதும் ஆழ்ந்த ஈடுபாடுக் கொண்டு எழுதுவதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தி, அதற்கேற்ப இளையத் தலைமுறை எழுத்தாளர்களை தயார் படுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் மேற்கொண்டுள்ள இந்த மாற்றம், மலேசியச் சமூகத்தின் பன்முக கலாச்சாரப் பாரம்பரியத்தைக் கொண்டாடுவதோடு, தேசிய ஒற்றுமைக்கான உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது என்று தான் நம்புவதாக மோகனன் பெருமாள் குறிப்பிட்டார்.