30 ஜுலை 2014 அன்று கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். இந்து சமயத்தையும் இந்து கடவுளையும் இழிவு படுத்துவது போல் கருத்துரைத்த இஸ்லாமிய மத போதகர் உஸ்தாஜ் சாஹுல் ஹமீட் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடத்தப்பட்ட இந்த போராட்டத்தை மஇகா மற்றும் பல்வேறு அரசு சாரா இயக்கங்கள் ஏற்பாடு செய்தன.
இதில் மஇகா உதவித் தலைவர் டத்தோ எம்.சரவணன், மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாசார அறவாரியத்தின் தலைவர் டி.மோகன் , மஇகா இளைஞர் பிரிவு தலைவர் திரு. சிவரா ஜ்சந்திரன், ம இகா மகளிர் பிரிவு தலைவி திருமதி மோகனா முனியாண்டி உட்பட பல முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விவகாரம் குறித்து திரு. சரவணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த சாஹுல் ஹமீட், உண்மையில் பாஸ் கட்சியின் உறுப்பினரா? அது உண்மை என்றால், பாஸ் கட்சி அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் இஸ்லாமிய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சாஹுல் ஹமீட், அழகப்பாஸ், பாபாஸ் போன்ற இந்து நிறுவனங்களிடம் இருந்து இஸ்லாம் மக்கள் பொருட்கள் வாங்கிப் பயன்படுத்த வேண்டாம் என்று கூறிய காணொளி கடந்த வாரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், அந்த காணொளியில் சாஹூல் ஹமீட், பெர்மாத்தாங் பாவ் அருகேயுள்ள அழகப்பாஸ் நிறுவனத்திற்கு முன் நாக்கு வெளியே நீட்டிய படி இந்து கடவுள் சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும், காரணம் தயாரிக்கப்படும் எல்லா மசாலா பொடிகளையும் கடவுள் சுவைத்த பின்னரே விற்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சாஹுல் ஹமீடின் இந்த பேச்சைக் கேட்ட மலேசிய இந்தியர்கள், அவருக்கு எதிராக முகநூல் மற்றும் துவிட்டர் இணையதளங்களில் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.
முவ்வினமும் இனமத வேறுபாடின்றி வாழும் நம் நாட்டில், இது போன்ற மத கலவரத்தை தூண்டகூடிய பொறுப்பற்ற சாஹுல் ஹமீட்டின் கருத்துக்கு அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனி ல்மலேசிய இந்தியர்கள் இந்த விவகாரத்தை அவ்வளவு எளிதில் மறந்து விடமாட்டார்கள் என்று மஇகா இளைஞர் பிரிவு தலைவர் திரு.சிவராஜ் சந்திரன் தெரிவித்தார்.
இது ஒரு தனி மனித கருத்து இதனை யாரும் மத விவகாரமாக கருத வேண்டாம் என டத்தோ டி.மோகன் கேட்டு கொண்டார். இருப்பினும் சாஹுல் ஹமீட்டின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பினாங்கில் சாஹுல் ஹமீட் வீட்டின் முன்பு மக்கள் போராட்டம் நடத்துவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும் இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்ட சமுக ஆர்வலர் டத்தோ ஹாஜி தஸ்லிம் பிற மதங்களை இழிவுபடுத்தும் முஸ்லிம்களை அல்லாவே மன்னிக்கமாட்டார். இதற்கு முன்பு, முன்னாள் பெர்காசா துணைத் தலைவர் சுல் கிப்ளி நோர்டின் இந்து சமயம் குறித்து இழிவுபடுத்துவது போல் கருத்துரைத்தார். அவரது கருத்துக்கு எதிராக மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதன் தொடர்பாக எந்த ஒரு திருப்தி அளிக்ககூடிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
இதன் தொடர்பாக சாஹுல் ஹமீட் மீது பல் வேறு மாநிலங்களில் புகார்கள் செய்யபட்டுள்ளது.