ஹமாஸ் ராக்கெட் தாக்குதலில் 9 இஸ்ரேல் வீரர்கள் பலி

ஹமாஸ் ராக்கெட் தாக்குதலில் 9 இஸ்ரேல் வீரர்கள் பலி

funeralrights

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 3 மாணவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக கடந்த 22 நாட்களாக தீவிரமாக சண்டையிட்டு வரும் இஸ்ரேலும் ஹமாஸ் போராளிகளும் கடந்த 26-ம் தேதி தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டனர். 

காஸாவில் வாழும் மக்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட வழி வகுக்கும் வகையில் மேலும் 24 மணி நேரத்துக்கு போர் நிறுத்தத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று ஐ.நா. அதிகாரிகள் இஸ்ரேலை கேட்டுக் கொண்டனர். 

இதனை இஸ்ரேலும் ஏற்றுக் கொண்ட நிலையில், காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டு ராணுவ டாங்கிகளும், காலாட்படையினரும் வெளியேறும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய ஹமாஸ் போராளிகள் நேற்று இஸ்ரேல் மீது 5 ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தினர். 

இவற்றில் 4 ராக்கெட்களை இஸ்ரேல் இடைமறித்து சுட்டு வீழ்த்தியது. ஒரு ராக்கெட் மட்டும் இஸ்ரேலில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்ததில் ஒரு வீடு இடிந்து தரை மட்டமாகியது. 

இதனையடுத்து, காஸா பகுதி மீதான வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை தொடர்ந்து நடத்துமாறு இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதன்யாகு உத்தரவிட்டார். 

இதை தொடர்ந்து மீண்டும் துவங்கிய இரு தரப்பு தாக்குதலின் விளைவாக பலியான பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 1066 ஆக உயர்ந்துள்ளது. இரு தரப்பிலும் சுமார் 6 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். 

இந்நிலையில், ஹமாஸ் படைகள் இன்று நடத்திய ராக்கெட் தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 9 ராணுவ வீரர்கள் பலியானதாகவும் இந்த சண்டையில் இது வரை பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.