மேலும் ஒரு நாளைக்கு போர் நிறுத்த அறிவிப்பு:இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்புதல்

மேலும் ஒரு நாளைக்கு போர் நிறுத்த அறிவிப்பு:இஸ்ரேல் - ஹமாஸ் ஒப்புதல்

imgHandler

ஜெருசலேம்: இஸ்ரேல் ராணுவம் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 8ம் தேதி மோதல் தொடங்கியது. காசா பகுதியில் அப்பாவி மக்கள் அதிகம் பலியானதைத் தொடர்ந்து இரு தரப்பும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கோரிக்கை விடுத்தார்.
அதையடுத்து நேற்று முன்தினம் 12 மணி நேரத்துக்கு சண்டையை நிறுத்தி வைக்க இரு தரப்பும¢ ஒப்புக் கொண்டன. இந்த நேரத்தை பயன்படுத்தி, காசா பகுதியில் சேதமடைந்த கட்டிடங்களில் இருந்த சடலங்கள் மீட்கப்பட்டன. மொத்தம் 130 உடல்கள் மீட்கப்பட்டன. இதையும் சேர்த்து பாலஸ்தீனம் பகுதியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,050ஆக உயர்ந்தது. 6 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தோரில் 192 குழந்தைகளும் அடங்குவர். 1.20 லட்சம் பேர் தங்கள் இடத்தைவிட்டு முகாமில் தங்கியுள்ளனர் என்று யூனிசெப் தெரிவித்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த பல்வேறு நாடுகள் முயன்று வருகின்றன.

நேற்று முன்தினம் அமெரிக்கா, துருக்கி, கத்தார் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு செயலர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். 12 மணி நேர போர் நிறுத்தத்தை தொடர வேண்டும் என்றும் ஐ.நா. பொதுச் செயலர் கோரிக்கை விடுத்தார். அதையடுத்து போர் நிறுத்தத்தை மேலும் ஒரு நாள் நீட்டிக்க தயாராக உள்ளதாக இஸ்ரேல் கூறியது.
ஆனால் அதை ஏற்க ஹமாஸ் அமைப்பு மறுத்தது. காசா பகுதியில் இருந்து தனது படைகளை, தளவாடங்களை முழுமையாக அகற்றாதவரை போர் நிறுத்தத்துக்கு வாய்ப்பில்லை என்று ஹமாஸ் கூறியது. பின்னர் போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் ஒப்புக் கொண்டது.

இந்திய வம்சாவளி ராணுவ வீரர் பலி

இந்த சண்டையில் இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றிய இந்திய வம்சாவளியை சேர்ந்த பராக் ரபேல் டிகோர்கர் பலத்த காயமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். பீனே-இஸ்ரேல் பிரிவைச் சேர்ந்தவர் இவர். இந்த பிரிவினர் இந்தியாவின் மும்பையை பூர்வீகமாகக் கொண்டவர்கள். இஸ்ரேலில் மட்டும் இந்தப் பிரிவைச் சேர்ந்த 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அதில் பெரும்பாலானோர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.