தென் திருப்பதி என்றும் திருமாலிருஞ்சோலை என்றும் ஆழ்வார்களால் மங்காளசனம் பாடப்பெற்று புகழ் வாய்ந்த தொன்மையான திருக்கோவில் மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இக்கோவிலில் நடைபெறும் முக்கியமான திருவிழாக்களில் ஆடி அமாவாசை விழா தனிச் சிறப்புடையதாகும்.
இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 2–ந் தேதி கொடியேற்றத்துடன் ஆடி பெருந் திருவிழா தொடங்குகிறது. இதற்கு முன்னதாக ஆடி அமாவாசை வருவது தனிச்சிறப்பாகும். இந்த விழாவையொட்டி மதுரை, திண்டுக்கல், தேனி, விருது நகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பஸ், கார், வேன், டிராகடர், மாட்டுவண்டி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்திருந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் அதிகாலையிலிருந்தே நூபுர கங்கையில் குவிந்தனர்.
அங்கு சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புவேலிகள் வழியாக பல மணி நேரம் காத்திருந்து புனித நீராடி அங்குள்ள ராக்காயி அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அவரவர் கொண்டு வந்திருந்த குடம் மற்றும பிளாஸ்டிககேன்களிலும் புனித தீர்த்தத்தை எடுத்து சென்றனர்.
இதுகுறித்து சிவகங்கையை சேர்ந்த சண்முகநாதன் கூறியதாவது:–
இந்த புனித தீர்த்தம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழகர்மலை உச்சியில் கண்டறியப்பட்டதாகும். சிலம்பாறு என்று பதிகங்களில் பாடப்பெற்ற பெருமை இதற்கு உண்டு. ஆண்டுக்கொரு முறை இந்த புனித தீர்த்தத்தில் ஆடி அமாவாசை நாளில் தீர்த்தமாடி இந்த புனித தீர்த்தத்தை தங்கள் இல்லங்களிலும், வியாபார ஸ்தலங்களிலும் தெளிப்பதினால் சகல சவுபாக்கியமும் கிட்டும் என்பது ஐதீகம்.
மேலும் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நடைபெறும் கும்பாபிஷேக விழாக்களுக்கு இந்த தீர்த்தத்தை எடுத்து செல்வது இன்றளவும் வழக்கத்தில் உள்ளது. இப்படி பிரசித்தி பெற்ற இந்த தீர்த்தத்தில் இரும்பு சத்தும், தாமிரசத்தும் மற்றும் பல்வேறு மூலிகைகளின் சத்துகளும் நிறைந்துள்ளதாகவும், சகல நோய் தீர்க்கும் அருமருந்தாகும் இந்த தீர்த்தம் விளங்குகிறது. வற்றாத ஜீவநதியாக வருடம் தோறும் வழிந்து கொண்டிக்கும் அபூர்வ தீர்த்தமாக கருதப்படுகிறது. என்று தெரிவித்தார்.
மேலும் முருகபெரு மானின் ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோவில், அழகர் மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவியருக்கும சிறப்பு அலங்காரம் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இங்கும் ஏராளமான பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இக்கோவிலின் காவல் தெய்வமான 18–ம் படி கருப்பணசுவாமி கோவிலில் பக்தர்கள் பூமாலைகள், எலுமிச்சம்பழம் மாலைகள், மற்றும் குடம் குடமாக சந்தனம் சாத்துபடி செய்யப்பட்டது. இங்கும் பக்தர்கள அதிகளவில் தரிசனம் செய்தனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடசாலம், நிர்வாக அதிகாரி வரதராஜன், மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அப்பன்திருப்பதி போலீசார் செய்திருந்தனர். இதையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது.