12 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல்- ஹமாஸ் ஒப்புதல்

12 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல்- ஹமாஸ் ஒப்புதல்

goma

இஸ்ரேல் நாட்டில் கடந்த மாதம் 12-ம் தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 3 இளைஞர்களை பாலஸ்தீனத்தின் காசா எல்லைப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் குழுவினர் கடத்தினர். 

அந்த மாணவர்களைக் கொன்று, பிரேதங்களை பாலஸ்தீனம் – இஸ்ரேல் ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதியான வெஸ்ட் பேங்க் அருகே வீசிச் சென்றனர். 

இதனையடுத்து, ஹமாஸ் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஹமாஸ் குழுவினரும் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தி வருவதால் காசா பகுதியை அவர்களிடம் இருந்து பறிக்கும் நோக்கத்தில் தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த 19 நாட்களாக நீடித்து வரும் இரு தரப்பு மோதலை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் எடுத்து வரும் முயற்சி பலனளிக்கவில்லை. 

இந்த மோதல்களின் விளைவாக சுமார் 850 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள் என தெரிய வந்துள்ளது. இஸ்ரேல் தரப்பிலும் 36 பேர் பலியாகியுள்ளனர்.

தாக்குதலில் சிக்கி காயமடைந்த பாலஸ்தீனியர்களை ஆஸ்பத்திரிகளுக்கு கூட கொண்டு செல்ல முடியாமல் உறவினர்கள் அவதிப்படுகின்றனர். மேலும், இது ரமலான் நோன்புக் காலமாக உள்ளதால் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்கி சேமித்துக் கொள்ளவும், அவற்றை விற்பனை செய்யும் கடைகளை திறந்து வைக்கவும் வசதியாக இரு தரப்பினரும் சில மணி நேரங்களுக்காவது போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், இஸ்ரேலும் ஹமாஸ் போராளிகளும் 12 மணி நேர போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்ளூர் நேரப்படி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த குறுகிய நேர போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.