ஆப்கானிஸ்தானில் சாலையில் வரிசையாக நிறுத்தி 15 பயணிகளை சுட்டுக்கொன்ற கும்பல்

ஆப்கானிஸ்தானில் சாலையில் வரிசையாக நிறுத்தி 15 பயணிகளை சுட்டுக்கொன்ற கும்பல்

mujahadeen

ஆப்கானிஸ்தானில் எழுச்சி பெற்றுள்ள தலிபான் போராளிகள் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் அரசுப் படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்கள் நடத்தும் தற்கொலைப்படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்படுகின்றனர்.

இந்நிலையில், மத்திய ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தில் நேற்று இரவு துப்பாக்கி ஏந்திய ஒரு கும்பல் இரண்டு வாகனங்களை வழிமறித்து அதில் இருந்த பயணிகளை கீழே இறக்கியுள்ளனர். அவர்களை சாலையோரம் வரிசையாக நிற்க வைத்து ஒருவர் பின் ஒருவராக சுட்டுக்கொன்றுள்ளனர். இவ்வாறு 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் மட்டும் அங்கிருந்து நைசாக தப்பிவிட்டார்.

இந்த படுகொலைக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பெரும்பாலும் பொதுமக்கள் கொல்லப்படும்போது அந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு தங்களுக்கு தொடர்பு இல்லை என்று கூறுவது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் நேற்று ஹெராத் நகரில் பின்லாந்து தொண்டுநிறுவன பெண் ஊழியர்கள் இரண்டு பேர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். தகார் மாகாணத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.