பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கில் சென்னையில் முக்கிய குற்றவாளி கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கில் சென்னையில் முக்கிய குற்றவாளி கைது

child

பாகிஸ்தான் நாட்டுக்கு உளவு பார்த்த புகாரில் சென்னையில் ஜாகீர்உசேன், சலீம் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஜாகீர்உசேன், இலங்கையைச் சேர்ந்தவர். இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் வேலை பார்க்கும் அதிகாரிகள் இருவர் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

கியூ பிரிவு போலீசார் முதலில் இந்த வழக்கை விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு, தேசிய புலனாய்வு பிரிவிற்கு மாற்றப்பட்டது. மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதி ஒருவரையும், இந்த வழக்கில் கைது செய்ய, கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அண்மையில் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரபீக்(வயது 29) என்பவர் ரூ.8.9 லட்சம் கள்ள நோட்டுகள் மற்றும் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார். சி.பி.சி.ஐ.டி. கள்ளநோட்டு தடுப்பு பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். பாகிஸ்தான் உளவாளி ஜாகீர்உசேனுக்கு, ரபீக் கள்ள நோட்டுகள் சப்ளை செய்துள்ளார். அந்த வகையில் இருவரும் சேர்ந்து செயல்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனால் ரபீக்கை, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கில் தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். கள்ள நோட்டு வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரபீக்கிடம், அவர் புதிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விஷயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.