விராட் கோலிக்கு பயிற்சியாளர் அறிவுரை

விராட் கோலிக்கு பயிற்சியாளர் அறிவுரை

Kohli

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் தடுமாறிய விராட் கோலி எப்படி பேட் செய்ய வேண்டும் என்று அவரது ஆரம்பகாலப் பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா அறிவுரை வழங்கியுள்ளார்.

களமிறங்கியவுடன் சில எளிதான தேர்ட் மேன் ரன்களுக்காக பக்கவாட்டில் ஷாட் ஆடுவதை விராட் கோலி தவிர்ப்பது நலம் என்று கூறுகிறார் அவர்.

“விராட் கோலி 6 டெஸ்ட் சதங்களை எடுத்துள்ளார். நீண்ட நாட்களுக்கு அவரை இவ்வாறு வீழ்த்திவிட முடியாது, நான் அவருடன் தொடர்ந்து பேசி வருகிறேன். இறங்கியவுடன் சிறிது நேரத்திற்கு ஆஃப் திசையில் ஸ்கொயர் திசையில் ஆடும் ஷாட்களை அவர் தவிர்ப்பது நல்லது என்று கூறியுள்ளேன். மிட் ஆன், மிட் ஆஃப் திசையைக் கவனத்தில் கொண்டு நேர் பேட்டுடன் அவர் ஆடவேண்டும், அப்படியாடினால் ஸ்விங் பவுலிங்கை ஒன்றுமில்லாமல் செய்யலாம்.

மேலும் பந்துகள் இன்ஸ்விங் ஆகும் போது ஃபிளிக் ஷாட்டையும் தொடக்கத்தில் தவிர்க்கக் கூறியுள்ளேன். இதனை அவர் கடைபிடித்தால் பெரிய இன்னிங்ஸ் ஒன்று காத்திருக்கிறது.

ஆனாலும் கோலி இதுவரை மோசமான ஷாட்டிற்கு அவுட் ஆகவில்லை. டெஸ்ட் போட்டிகளின் மிகச்சிறந்த பவுலர்களின் மிகச்சிறந்த பந்துக்கு அவர் அவுட் ஆகியுள்ளார். உதாரணத்திற்குக் கூற வேண்டுமென்றால், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜேம்ஸ் ஆண்டர்சன் அவருக்கு வீசிய பந்து அபாரமானது. உள்ளே ஸ்விங் ஆன பந்து பிறகு சற்றே வெளியே சென்றது. அது ஒரு தரமான பந்துவீச்சே.

2வது இன்னிங்ஸில் பிளன்கெட் பந்தை ஆடாமல் விட்டு பவுல்டு ஆனார். காரணம் லார்ட்ஸ் மைதான பிட்ச் ஒரு பகுதியில் இறக்கமாக உள்ளது. பிளன்கெட் ஏற்றமாக இருக்கும் பகுதியில் பந்து வீசினார். அவ்வாறான தருணங்களில் பந்து இவ்வளவு இன்ஸ்விங் ஆகாது என்றே விராட் கோலி நினைத்தார். ஆனால் அது நன்றாக உள்ளே வந்தது.

நல்ல பந்துகளை வீசுவது சகஜம்தான். ஆனால் விராட் கோலியிடம் இதற்கெல்லாம் விடையிருக்கிறது. விரைவில் பெரிய இன்னிங்ஸ் ஒன்றை எதிர்பார்க்கலாம்” இவ்வாறு கூறினார் ராஜ்குமார் ஷர்மா.