பெட்டாலிங் ஜெயா, செக்சன் 17லில் ம இ கா பெட்டாலிங் ஜெயா உத்தாரா தொகுதியின் புதிய அலுவலகத்தை ம.இ.கா வின் தேசிய தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் இன்று 01/10/2017 அன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தப் பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர் பட்டியலை ம இ கா பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் ம இ கா ஐவரின் பெயரை சமர்ப்பித்துள்ளது. தேசிய முன்னணியின் தலைவர் என்ற வகையில் பிரதமர், வேட்பாளரை தேர்வுச் செய்வார் என அவர் அப்போது தெரிவித்தார்.
பிரதமரின் வேட்பாளர் தேர்வு லஞ்ச ஒழிப்பு ஆணைய சோதனைக்கு உட்பட்டே அமைந்திருக்கும். அதில் ம இ கா தலையிடாது. மேலும், ம இ கா தனியாக எந்நடவடிக்கையிலும் ஈடுபடாது எனவும் அவர் தெளிவுப்படுத்தினார்.
ம இ கா பெட்டாலிங் ஜாயா உத்தாரா தொகுதிப் பற்றிப் பேசிய டத்தோஸ்ரீ சுப்பிரமணியம், தொகுதியின் புதிய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள டத்தோ டி. முருகையா சிறப்பாக சேவையாற்றி வருவது குறித்து பாராட்டுத் தெரிவித்தார்.
பெட்டாலிங் ஜெயா உத்தாரா தொகுதியில் ஏறத்தாழ 7,000 பதிவுப் பெற்ற இந்திய வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளருக்கு வாக்களிப்பதை கிளைகளின் பொறுப்பாளர்கள் உறுதிச் செய்ய வேண்டும் என டத்தோஸ்ரீ தமதுரையில் கேட்டுக் கொண்டார்.
இன்றைய நிகழ்வில் ம இ கா வினரோடு, தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளின் பொறுப்பாளர்களும் திரளாக கலந்து சிறப்பித்தனர்.