இன்று 01/10/2017 அன்று மலாயா பல்கலைக்கழகத்தில் உள்ள லிம் கோ தோங் மண்டபத்தில் பக்தி சக்தி ஏற்பாட்டில் “சூரசம்ஹாரம்” என்ற இந்திய மாணவர்களுக்கென சிறப்பு கருத்தரங்கம் மற்றும் பெற்றோருக்கான எழுச்சியுரை காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற்றது. இந்த சிறப்பு கருத்தரங்கை மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் ம.இ.கா வின் தேசிய தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமையேற்று துவக்கி வைத்து மாணவர்களிடையே உரையாற்றினார். மத்திய பிரதம மந்திரி அமைச்சகத்தின் துணை அமைச்சரும் ம.இ.காவின் தேசிய துணை தலைவருமான டத்தோஸ்ரீ SK தேவமணி அவர்கள் ஏற்பாடு செய்து கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப் படுத்தி உரையாற்றினார்.
இந்துக்கள் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகையும் பொருள் பொதிந்தவையாகும். அந்த வகையில் நவராத்திரி பண்டிகை மாணவர்களுக்கு நல்ல சிந்தனையை ஏற்படுத்துவதோடு அவர்களின் வெற்றிக்கு உந்து சக்தியாக அமைந்துள்ளது என ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தனது உரையில் தெரிவித்தார்.
இந்த கருத்தரங்கில் படிவம் நான்கு மற்றும் ஐந்தை சேர்ந்த மாணவர்கள் திரளாக கலந்து கொண்டுள்ளனர். வாழ்க்கையில் வெற்றிப் பெற வேண்டுமானால், மாணவர்களான உங்களுக்குக் கல்வி மீது ஆழமான “பத்தி” இருக்க வேண்டும். அதோடு, கடுமையான உழைப்பும், விடா முயற்சியும் இருக்க வேண்டும். அப்போதுதான் “சக்தி” உங்களுக்கு உறுதுணையாக இருந்து அருள் பாளிப்பார். வாழ்க்கை என்பது ஒரு வட்டத்திற்குள் உள்ளடக்கியது என டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் மாணவர்களுக்குத் தெளிவுப்படுத்தினார்.
மாணவர்களுக்கு ஒவ்வொரு தேர்வும் மிக முக்கியமான ஒன்றாகும். இன்று இந்த கருத்தரங்கில் வழங்கப்படும் தேர்வு யுத்திகளும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என நான் கருதுகிறேன். எனவே, மாணவர்கள் மீதமுள்ள நாட்களை நல்ல முறையில் பயன்படுத்தி தேர்வில் வெற்றிப் பெற தாம் இறைவனிடம் வேண்டுவதாக டத்தோஸ்ரீ குறிப்பிட்டார்.
இந்த பிரமாண்டமான கருத்தரங்கில் 521 மாணவர்களும் அவர்தம் பெற்றோர்களும் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.