மலேசியா முழுதும் இன்று எல்லோரும் பேசும் ஒரே விஷயம் என் வீட்டுத் தோட்டத்தில் மலேசிய தமிழ்த் திரைப்படம் பற்றித்தான் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் மலேசிய தமிழ் இணையவாசிகள் அனைவரும் கண்டிப்பாக இந்த திரைப்படத்தை பற்றித்தான் பேசிக் கொண்டிருப்பார்கள் என்பது பேஸ்புக்கையும் வாட்சப்பையும் இன்ஸ்டாக்ராமையும் உலா வருகையில் புரிகிறது.
நாட்டில் உள்ள அனைத்து திரையுலக பிரபலங்களும் புதிதாக திரைத்துறைக்கு வந்தவர்களும் வரும் ஆர்வம் உள்ளவர்களும் என அனைவரும் என் வீட்டுத் தோட்டத்தில் திரைப்படத்தை மிகவும் சிலாகித்து பாராட்டுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் படத்தில் ஒவ்வொன்று பிடித்திருக்கிறது. சிலருக்கு பல விஷயங்கள் பிடித்திருக்கிறது. ஆனால் எல்லோரும் சொல்லும் விஷயம் பயம் என்பதுதான். அனைவரையும் படம் முழுதும் அடுத்தது என்ன நடக்கும் என சீட்டின் நுனியில் உட்கார வைப்பதுடன் உறைய வைக்கும் பயத்தையும் ஏற்படுத்துகிறது என்பது மட்டும் அனைவரின் கருத்தாக இருக்கிறது. இதுதான் என் வீட்டுத் தோட்டம் படத்தின் மிகப் பெரிய வெற்றி.
பயத்திற்கு அடுத்த படியாக இந்த திரைப்படத்தில் எல்லோரும் பாராட்டுவது நடிகை ஜெயா கணேசனின் நட்டிப்பை. அவருக்கு விருதுகள் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் சில சினிமா பார்வையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இயக்குநர் கார்த்திக் ஷாமளன், இசை அமைப்பாளர் ஷமேஷன் மணி மாறன், கேமராமேன் ரவின் மனோகரன் மற்றும் எடிட்டர் சங்கர் இந்திரா வுடைய உழைப்பை பலரும் பாராட்டி இருக்கின்றனர். மலேசிய சினிமா உலகிற்கே இது ஒரு புது கதை களம் என்பதால் என் வீட்டுத் தோட்டத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த எதிர்பார்ப்பை ஈடுசெய்கின்ற வகையில் திரைப்படம் இருப்பதால் மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என் வீட்டு தோட்டத்தில்.
திரைப்படக் குழுவினர் கையாண்ட விளம்பர யுக்திகளும் இணையத்தில் அதற்கு ஏற்படுத்திய ஒரு எதிர்பார்ப்பும் இளைஞர்களிடம் இந்த படத்தை நன்கு அறிமுகப் படுத்தி இருக்கிறது. இந்த திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற தேர்ந்தெடுக்கப் பட்டு திரைபிடப்பட்டது இந்த படத்திற்கான தரத்தை விளக்குகிறது.