10/09/2017 ஞாயிற்றுக்கிழமை தலைநகர் மலாயாப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் எம்ஜிஆரின் முழு உருவ வெண்கலச் சிலையை விழா மேடையில் திறந்து வைத்தார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஏற்பாட்டுக் குழுவின் தலைவரான எஸ்.பி.மணிவாசகம் இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றினார்.
எம்ஜிஆர் உருவத்தில் வந்து பிரமுகர்களை வரவேற்ற நடிகர்கள்…
மலேசியாவுக்கென எம்ஜிஆரின் இந்த வெண்கலச் சிலையை தமிழகத்தின் பிரபல வணிகப் பிரமுகர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் தனது நன்கொடையாக வழங்கியிருந்தார்.
இன்றைய விழாவில் தமிழகத்திலிருந்து வி.ஜி.சந்தோஷமும், தமிழக அரசின் தகவல் அமைச்சர் கடம்பூர் ராஜூவும் கலந்து கொண்டனர். தமிழகத்திலிருந்து மட்டுமின்றி சிங்கப்பூர், மியன்மார், இந்தோனிசியா போன்ற அண்டை நாடுகளில் இருந்தும் திரளான பேராளர்கள் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மாநாட்டில் கலந்து கொண்டனர். மலேசியாவுக்கான இந்தியத் தூதர் திருமூர்த்தியும் இன்றைய விழாவில் கலந்து கொண்டார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற புகைப்படக் காட்சியைப் பார்வையிடும் டாக்டர் சுப்ரா…அவருடன் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய டாக்டர் சுப்ரா, எம்ஜிஆர் தன் வாழ்நாள் முழுவதும் நல்லவனாகவும், ஒழுக்கமுள்ளவனாகவும் படங்களில் நடிப்பதில் தெளிவாகவும் உறுதியாக இருந்தார் என்பதைச் சுட்டிக் காட்டினார். இதன்மூலம் இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும், நல்ல சிந்தனைகளை அவர்களிடத்தில் விதைப்பவராகவும் எம்ஜிஆர் திகழ்ந்தார் என்றும் டாக்டர் சுப்ரா புகழ்ந்துரைத்தார்.
“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது முடிந்தபின்னாலும் பேச்சிருக்கும் என எம்ஜிஆர் பாடியதைப் போலவே அவரது மூச்சு மறைந்ததுக்குப் பின்னரும் அவர் பெயர் நிலைத்திருக்கிறது. நாமும் அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வருகிறோம். அவரது சொல், செயல், நடவடிக்கைகள் அனைத்தும் சிறப்பாக இருந்ததால்தான் அவர் இன்றும் நினைவுகூரப்படுகிறார்” என்றும் டாக்டர் சுப்ரா தனதுரையில் குறிப்பிட்டார்.
படங்களில் தொழிலாளர்களுக்காகவும், பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும், அடிமட்ட மக்களுக்காகவும், போராடுபவராகவும், உழைப்பவராகவும் நடித்து மக்களின் மனங்களில் அவர் இடம் பிடித்தார். அதனால் மக்கள் அவரை அப்படிப்பட்டவராகவே பார்க்கத் தொடங்கினர். பின்னர் முதல்வராகப் பின்னர் தான் நடித்த படங்களைப் போலவே மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்யும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது” என்றும் டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.
எம்ஜிஆரைப் போலவே பிறருக்கு உதவும் பண்புகளையும், ஒழுக்கமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் மனப்பாங்கையும், நல்ல சிந்தனைகளைப் பின்பற்றும் வாழ்க்கை முறையையும் இன்றைய இளைஞர்கள் கொண்டிருக்க வேண்டும் என்றும் டாக்டர் சுப்ரா கேட்டுக் கொண்டார்.