எம்.ஜி.ஆர் புரொடக்ஷன்ஸ் ஏற்பாட்டில் எம்.கே.யு. மலேசிய கலை உலகம் உடன் இணைந்து எம்.ஜி.ஆர். ரின் 100 வது பிறந்த வருட பொன்விழாவை தொடர்ந்து ”பொன்மனச் செம்மலின் பொன்விழா 2017” என்ற விருந்துடன் கூடிய கலை இரவு நிகழ்ச்சி ஆகஸ்டு 12 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 06.00 துவங்கி 11.00 மணி வரை கோலாலம்பூரில் உள்ள தன்ஸ்ரீ KR சோமா அரங்கில் மிக விமர்சையாக நடந்தேறியது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஆஸ்திரேலியாவில் இருந்து திரு. வெங்கட் ராவ் மற்றும் அவரது துணைவியார், பேராசிரியர் உயர்திரு . வா. பாலகிருஷ்ணன் அவர்கள் , பல நாடுகளில் பெரும்புகழ் பெற்ற சிங்கப்பூர் எம்.ஜி.ஆர் மற்றும் சென்னை லயன்ஸ் கிளப் கவர்னர் டாக்டர். மணிலால் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
முதலில் விருந்தும் அதை தொடர்ந்து நடந்த வண்ணமிகு நிகழ்ச்சியில் பல்வேறு கலைஞர்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த மக்கள் திலகம் பொன்மனச் செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற திரைப்பட பாடல்களை மேடையில் பாடியும் அவரது பாடல்களுக்கு அவரை ஒத்த உருவம் கொண்டவர்கள் அவர்போலவே ஒப்பனை செய்து ஆடியும் வந்திருந்த பார்வைபாளர்களை கவர்ந்தனர். இந்த பாடல்களும் ஆடல்களும் புரட்சித் தலைவரை நினைவு கூர்ந்து அவருக்கு மரியாதை செய்யும் விதமாக இருந்தது.
நிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாக தமிழகத்தை சார்ந்த பேராசிரியர் மற்றும் சினிமா வரலாற்று ஆராய்ச்சியாளர் பேரா. உயர்திரு வா. பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய ”எம் ஜி.ஆரின் வாத்தியார் காளி என். ரத்தினம்” என்ற புத்தக வெளியீடு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள், பங்குபெற்ற கலைஞர்கள் மற்றும் வாழ்வில் சிறப்பாக கலைச் சேவை செய்துவரும் கலைஞர்கள் பலருக்கும் மேடையில் சிறப்பு செய்யப்பட்டு விருதுகளும் வழங்கப்பட்டது.
MALAYSIAN ASSOCIATION FOR THE BLIND சங்கத்திற்கு நன்கொடையாக Rm 3,000 பார்வையற்றோர் முன்னேற்றத்திற்கு அந்த நிறுவனத்தின் உறுப்பினரிடம் மேடையினில் காசோலையாக வழங்கப்பட்டது.
மக்கள் திலகத்தின் ரசிகர்களை உற்சாகப்படுத்தி மகிழ்ச்விக்கும் விதத்தில் சிலம்பம் கலை நிகழ்ச்சியும் மேடையில் நிகழ்த்தப்பட்டது.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாக் குழுவினருக்கு விழாவினை சிறப்பாக நடத்த சிங்கப்பூர் எம்.ஜி.ஆர். அவர்கள் வழிகாட்டி உதவினார். விழாவினை எம்.ஜி.ஆர். புரொடக்ஷன்ஸ் எம்.ஜி.ஆர்.கலைமகள் பூங்கொடியும், எம்.கே.யு. மலேசிய கலை உலகம் குழுவினரும் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். மேடையில் தமிழ்ச்செல்வன் விழாவை மிகவும் சிறப்பாக வழிநடத்தினார்.