ஒரு படத்துக்கு 30 முதல் 50 நாட்கள் வரை கால்ஷீட் கொடுத்து நடித்து வாங்கும் சம்பளத்தை விட, ஒரே ஒரு பாட்டுக்கு, ஆட்டம் போட்டு அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் திலகர் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார் நீது சந்திரா. ஏற்கனவே யுத்தம் செய், சேட்டை படங்களில் இவர் ஆடியிருக்கிறார். விமல், பிரியா ஆனந்த் நடிக்கும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் இனியா ஆடுகிறார். இவர் ரெண்டாவது படம், கதை திரைக்கதை வசனம் இயக்கம் படங்களில் ஆடியிருக்கிறார். விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடிக்கும் வெள்ளக்கார துரை படத்தில் ஒரு பாடலுக்கு மீனாட்சி ஆடுகிறார். திருடன் போலீஸ் படத்தில், ஒரு பாடல் காட்சியில் விஜய் சேதுபதியுடன் சாரிகா ஆடியிருக்கிறார்.
அஞ்சான் படத்தில் இந்திப் பட ஹீரோயின் சித்ரங்காடா சிங் ஆடியுள்ளார். காஜல் அகர்வால் தெலுங்கு படம் ஒன்றில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். சமந்தா ஹீரோயினாக நடிக்கும் அல்லுடு ஸ்ரீனு என்ற தெலுங்கு படத்தில் தமன்னாவும் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கும் ஆகடு படத்தில் ஸ்ருதிஹாசனும் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளனர். இப்படி ஒவ்வொரு படத்திலும் ஹீரோயின்களே ஒரு பாடலுக்கு ஆட ஆர்வம் காட்டுவதால், குத்துப்பாட்டுக்கு ஆடுவதற்கு என்றே காத்திருக்கும் நடிகைகளுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
அபிநயஸ்ரீ டான்ஸ் மாஸ்டராகி விட்டார். ரிஷா, மைனா நாகு ஆகியோர் சில படங்களில் ஆடி வருகின்றனர். ஒரு முழு படத்தில் நடித்து வாங்கும் சம்பளத்தை விட, ஒரு பாடலுக்கு ஆடுவதில் அதிக வருமானம் கிடைப்பதால் ஹீரோயின்களே குத்துப்பாடலுக்கு ஆட ஆர்வம் காட்டி வருவதாக சில மானேஜர்கள் தெரிவித்தனர்.