காசா மீதான தீர்மானம்: ஐ.நா மனித உரிமைக் கமிஷனுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிப்பு

காசா மீதான தீர்மானம்: ஐ.நா மனித உரிமைக் கமிஷனுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிப்பு

UnitedNationUnited_Nations

UnitedNationமூன்று இஸ்ரேலிய இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாகத் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.இந்தத் தாக்குதலில் இதுவரை 680 பாலஸ்தீனியர்களும், 31 இஸ்ரேலியர்களும் பலியாகி உள்ளனர். 

அமெரிக்கா உட்பட உலக நாடுகள் அனைத்தும் இந்தப் போரினை நிறுத்துமாறு வலியுறுத்தி வருகின்றன. தொடரும் இந்தத் தாக்குதல் போர்க் குற்றமாகக் கருதப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்று ஐ.நா மனித உரிமைக் கழகத் தலைவர் நவி பிள்ளை ஒரு எச்சரிக்கை அறிக்கையையும் வெளியிட்டார்.  

ஆனால் இதனை மறுத்துள்ள இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. இதனால் ஐ.நா மனித உரிமைக் கமிஷன் இஸ்ரேல் மீது விசாரணை நடத்தும் தீர்மானம் ஒன்றின் மீது நேற்று வாக்கெடுப்பு நடத்தியது. 47 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சபையில் 17 நாடுகள் ஒதுங்கியிருக்க 29 நாடுகள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. 

பிரிக்ஸ் நாடுகள் என்று அழைக்கப்படும் பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளுடன் இந்தியாவும் இந்தத் தீர்மானத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. அமெரிக்கா இந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் வாக்களிக்காமல் ஒதுங்கிவிட்டன.  

இதற்கு முன்னால் யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளும் வண்ணம் அரசியல் விருப்பத்தை நிரூபிக்கும்படியான பேச்சு வார்த்தையை மேற்கொள்ளும்படி இந்தியா இஸ்ரேல், பாலஸ்தீனிய நாடுகளைக் கேட்டுக்கொண்டது.இது குறித்து தாங்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பதாக ஐ.நாவிற்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியான அசோக் முகர்ஜி ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற வெளிப்படையான விவாதத்தின்போது குறிப்பிட்டார்.  

ஏராளமான பொதுமக்கள் பலியாவதையும், சொத்துகளுக்கு கடும் சேதம் ஏற்படுவதையும் மேலும் அதிகரிக்கும்விதமாக இந்த இரு நாடுகளுக்கிடையேயான யுத்தம் தொடர்ந்துவருவது குறித்த இந்திய அரசின் கவலையையும் அவர் இங்கு வெளியிட்டார்.