மலேசியாவில் இந்தியர் மேம்பாட்டுக்கான “நாம்” அறவாரியத்தின் ஏற்பாட்டில் மலேசியா எங்கும் உள்ள 2000த்திற்கும் அதிகமான தமிழாசிரியர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் “கம்பன் கண்ணதாசன் இலக்கியப் பயிலரங்கம்” 10 மாநிலங்களில் கடந்த ஏழுமாதங்களாக நடத்தப்பட்டன. இந்த பயிலரங்கின் நிறைவுவிழா கடந்த ஞாயிற்றுக் கிழமை 30/07/2017 அன்று மாலை 03.30 மணிக்கு கோலாலம்பூரில் ஜாலான் ஈப்போவில் உள்ள செட்டியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கம்பன் தமிழ் பற்றி “அலகிலா விளையாட்டு” என்ற தலைப்பில் பேராசியர் விஜயசுந்தரியும் பாரதியின் தமிழ் பற்றி “யாதுமாகி நின்றாய்” என்ற தலைப்பில் டாக்டர் தேவிலட்சுமியும் கண்ணதாசன் தமிழ் பற்றி “பாட்டுடைத் தலைவன்” என்ற தலைப்பில் டாக்டர் வாசுகி மனோகரனும் உரையாற்றினர். விழாவிற்கு மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மற்றும் நாம் அறவாரியத்தின் நிறுவனருமான மாண்புமிகு டத்தோ எம்.சரவணன் அவர்கள் தலைமை தாங்கினார். விழாவில் தமிழ் ஆர்வலர்களும் பொது மக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.