சிகாமட் நாடாளுமன்ற இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கான “இந்து சமயப் பயிலரங்கம்” இன்று 21/07/2017 அன்று காலை 08.00 மணிக்கு துவங்கி மாலை 04.30 மணி வரை பத்து அன்னம், சிகாமட்டில் உள்ள தாமான் டேசா இந்தியா சமூக மண்டபத்தில் நடைபெற்றது. இந்த பயிலரங்கில் சிறப்பு விருந்தினராக ம.இ.கா தேசிய தலைவரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் ச. சுப்ரமணியம் சிறந்து விருந்தினராக கலந்து கொண்டார். இந்த பயிலரங்கை மலேசிய இந்து சங்கம் -பூலோ காசாப் கிளை யும் EWRFஉம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். சிகாமட் நாடாளுமன்றத்தை சேர்ந்த 8 இடைநிலைப் பள்ளிகளில் இருந்து சுமார் 200 மாணவர்கள் இந்த பயிலரங்கில் கலந்து கொண்டனர்.
இந்த பயிலரங்கை டாக்டர் சுப்ரா துவங்கிவைத்து உரை நிகழ்த்தினார். அவரது உரையில் தமிழ்பள்ளியில் கல்விப் பயில்கின்ற காலத்தில் மிகவும் பண்போடும், பணிவோடும் காணப்படும் நமது இன மாணவர்கள் மத்தியில், இடைநிலைப் பள்ளிக்குச் சென்றப் பின்னர் அப்பண்புகள் சற்றுக் குறைவாக காணப்படுவது வருத்தமளிப்பதாக உள்ளது என டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இப்பிரச்சனைக்குத் தக்கத் தீர்வுக் காண இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு நற்பண்புகளைப் போதிக்கும் இந்து சமய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அதிகம் நடத்தப்பட வேண்டும் என டத்தோ கேட்டுக் கொண்டார்.
மேலும் பேசுகையில், எந்தவொரு குழந்தை தமது பெற்றோரை மதித்து நடக்கின்றதோ அக்குழத்தை எந்த வயதிலும் – எந்த சூழ் நிலையிலும் தவறாக நடக்க வாய்ப்பில்லை. அதற்காகத்தான் நமது முன்னோர்கள் மாதா, பிதா, குரு, தெய்வம் எனக் கூறினர். அவர்கள் தங்களது பிள்ளைகளுக்கு – தங்களது சீடர்களுக்குத் தவறான போதனையைப் போதிப்பது கிடையாது என்றார் அவர்.