அரசியலுக்கும், சமுதாயத்துக்கும் நல்ல அணுக்கமான தொடர்பு இருக்க வேண்டும், அப்போதுதான் சமுகத்துக்காக மேற்கொள்ளப்படும் அனைத்துத் திட்டங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறும் என ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்தார்.
20/07/2017 அன்று மாலை மலாக்காவில் கோத்தா மலாக்கா மஇகா தொகுதி ஏற்பாடு செய்திருந்த லட்சியங்களும் நிதர்சனங்களும் (Aspirations and Reality) என்ற கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்ட போது சுகாதார அமைச்சருமான டத்தோ சுப்ரா இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள இந்தியர்களுக்கான பத்தாண்டு வியூக செயல் திட்டம், இந்தியர்களை சிறுதொழிலில் ஈடுபடுவதை ஊக்குவிக்கிறது. ஆங்காங்கு உள்ள அமைப்புக்கள் நடத்தும் சிறுதொழில் பயிற்சிகளில் கலந்து பயனடைவதன் மூலமே சமூகம் வெற்றிப்பெற முடியும் என டத்தோஸ்ரீ தெரிவித்தார்.
இன்றைய நிகழ்வில் தையல், சிகை அலங்காரம், முக ஒப்பனை, மருதானி வரைதல், பேக்கரி, மெண்டரின் மொழிக் கற்றல், யோகா பயிற்சி போன்றவற்றை முறையாக முடித்துக் கொண்ட 106 பேருக்கு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், யுபிஎஸ்ஆர், பிடி3 மற்றும் எஸ்பிஎம் ஆகிய தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற 24 மாணவர்கள் சிறப்புப் பரிசுனைப் பெற்றனர். அனைவருக்கும் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கினார்.
நிகழ்வில் நடந்த கலந்துரையாடலில் National Transformation(TN50) மற்றும் மலேசிய இந்தியர் செயல்திட்ட வரைவு பற்றி மாணவர்களுடனும் பொதுமக்களுடனும் டாக்டர் சுப்ரா கலந்துரையாடினார்.