கடந்த வியாழக்கிழமை (7 ஜூலை 2017) கோலாலம்பூர் ஷங்ரிலா தங்கும் விடுதியில் குழந்தைகள் நல மருத்துவத்தில் வலி நிவாரணம் குறித்த அனைத்துலகக் கருத்தரங்கை மத்திய சுகாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அதிகாரபூர்வமாகத் துவக்கி வைத்தார்.
அனைத்துலக அளவில் சுமார் 400 மருத்துவர்களும், மருத்துவ நிபுணர்களும் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்கின்றனர். குழந்தைகள் மருத்துவத் துறை வலிநிவாரணம் குறித்த இத்தகைய கருத்தரங்கம் நடத்தப்படுவது இதுதான் உலகிலேயே முதல் தடவை என்பதோடு, அதனை ஏற்று நடத்தும் உபசரிப்பு நாடாக மலேசியா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நமது நாட்டிற்குக் கிடைத்த கௌரவம் என்றும் இக்கருத்தரங்கம் குறித்து சுகாதார அமைச்சரான டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.
“மருத்துவத்தில் இந்தப் புதிய துறை அண்மையக் காலத்தில் பன்மடங்கு முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது. உதாரணமாக அறுவைச் சிகிச்சைக்கு 2 அல்லது 3 நாட்கள் காத்திருக்கும் பட்சத்தில் வலியால் அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் பொறுப்பு மருத்துவர்களுக்கு உண்டு. எத்தகைய அளவு மருந்துகள் மூலம் வலிக்கு நிவாரணம் அளிக்கலாம், கட்டுப்படுத்தலாம் என்பது போன்ற சிகிச்சைகளை வழங்க சிறப்பு மருத்துவ மையங்கள் தற்போது ஏற்படுத்தப்படுகின்றன” என்றும் டாக்டர் சுப்ரா மேலும் கூறினார்.
“இத்தகைய ஆராய்ச்சிகள் மூலம் நாட்டின் மருத்துவத் துறை வளர்ச்சி சாதகமான பல பயன்களைக் கண்டு வருகிறது. அறுவைச் சிகிச்சைகள் முடிந்து குணமடையும் காலமும் வெகுவாகக் குறைந்து வருகிறது. குறிப்பாக புற்றுநோய் சிகிச்சைகளில் வலியற்ற சிகிச்சை முறைகள் வழங்கப்படும் நடைமுறைகள் அதிகரித்து வருகின்றன. இதன் மூலம் நோயாளிகளுக்கு வலி நிவாரணம் அளிக்கும், வலியைக் குறைக்கும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன”.
மலேசியாவிலும் இந்தத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்ட டாக்டர் சுப்ரா, வலியற்ற சிகிச்சைகள் வழங்கும் 10 அல்லது 12 மருத்துவ மனைகளும் பிரத்தியேகமாக அடையாளங் காணப்பட்டிருக்கின்றன என்றும் இனிவரும் காலங்களில் இத்தகைய மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். நிபுணத்துவம் பெற்றவர்கள் மற்றும் இந்தத் துறையில் போதுமான அறிவும் அனுபவமும் பெற்றவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலமும் தொடர்ந்த பயிற்சிகளை வழங்கி வருவதன் மூலமும் இந்த இலக்கை அடைய முடியும் என்றும் டாக்டர் சுப்ரா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.