நீதிபதி பதவியில் நீடித்தது எப்படி? இணையதள பக்கத்தில் மார்க்கண்டேய கடஜு விளக்கம்

நீதிபதி பதவியில் நீடித்தது எப்படி? இணையதள பக்கத்தில் மார்க்கண்டேய கடஜு விளக்கம்

Tami

சென்னை உயர் நீதிமன்றத்தில், ஊழல் புகார்களுக்கு ஆளான ஒருவருக்கு, கூடுதல் நீதிபதியாக பணி நீட்டிப்பு வழங்கப்பட்டதற்கு, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கட்சி தான் காரணம்’ என, ‘பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா’வின் தலைவர், மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதியும், சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதியும், பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா அமைப்பின் தற்போதைய தலைவருமான மார்கண்டேய கட்ஜு, தன் இணையதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதிமன்றத்தில், ஒரு கூடுதல் நீதிபதி இருந்தார். அவர் மீது, ஏராளமான ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டிருந்தன. அவர், தமிழகத்தில், மாவட்ட நீதிபதியாக, நேரடியாக நியமனம் பெற்றவர். அப்பொறுப்பில், அவர் இருந்த போது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பலர், அவருக்கு எதிராக, எட்டு கருத்துக்களை பதிவு செய்து இருந்தனர். ஆனால், சென்னை உயர் நீதிமன்ற, தலைமை நீதிபதியாக (பொறுப்பு) இருந்த ஒருவர், அந்த மாவட்ட நீதிபதிக்கு எதிராகக் கூறப்பட்டிருந்த கருத்துக்களை, ஒரே ஒரு கையெழுத்தின் மூலம் நீக்கினார். புகாருக்கு ஆளான நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பொறுப்பு ஏற்க, இது வழிவகுத்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, 2004ல், நான் பொறுப்பேற்ற போது, அந்த கூடுதல் நீதிபதியும் பொறுப்பில் இருந்தார். தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சியின் தலைவரின் பரிபூரண ஆதரவு, அந்த கூடுதல் நீதிபதிக்கு இருந்தது. மாவட்ட நீதிபதியாக அவர் இருந்த போது, அந்த தலைவருக்கு எதிரான ஒரு வழக்கில், அவருக்கு ஜாமின் வழங்கி உள்ளார் என்றே, என்னிடம் கூறப்பட்டது. அந்த நீதிபதியின் ஊழல்கள் குறித்து, ஏராளமான அறிக்கைகள் எனக்கு வந்தன. எனவே, அந்த நீதிபதி குறித்து, மத்திய உளவுத் துறை விசாரணை நடத்தி, அதன் ரகசிய அறிக்கை பெற வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த, ஆர்.சி.லகோட்டியிடம் நான் வேண்டுகோள் விடுத்தேன். சில வாரங்கள் கழித்து, நான் சென்னையில் இருந்த போது, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ஆர்.சி.லகோட்டியின் செயலர், என்னுடன் போனில் பேசினார். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, என்னுடன் பேச உள்ளார் என்றும் கூறினார். பின்னர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, எனக்கு போன் செய்தார். கூடுதல் நீதிபதி குறித்து, நான் தெரிவித்த தகவல்கள் உண்மை தான். அந்த நீதிபதியின் ஊழல் நடவடிக்கைகள் குறித்து, மத்திய உளவுத் துறையிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன என்றும், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

கூடுதல் நீதிபதி பொறுப்பு என்பது, இரண்டு ஆண்டுகளுக்கானது. அந்த கூடுதல் நீதிபதியின் பதவிக் காலம் முடிவடையும் சூழ்நிலை காணப்பட்டது. மத்திய உளவுத் துறை அறிக்கை அளித்து இருப்பதால், அந்த கூடுதல் நீதிபதிக்கு, பணி நீட்டிப்பு வழங்கப்படாது; சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி பொறுப்பில் இருந்து அவர், விடுவிக்கப்பட்டு விடுவார் என்றே, நான் கருதினேன். ஆனால், அவருக்கு கூடுதல் நீதிபதியாக, மேலும், ஒரு ஆண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அவருடன் கூடுதல் நீதிபதி பொறுப்பில் பணியாற்றிய, ஆறு பேர், சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றனர். இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்பது, பின்னர் தான் எனக்கு தெரிய வந்தது.
பெரும்பான்மை இல்லை:
சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக யாரை நியமிக்க வேண்டும் என பரிந்துரை செய்ய, ஐந்து மூத்த நீதிபதிகள் இடம் பெற்ற சுப்ரீம் கோர்ட், ‘கொலிஜியம்’ அமைப்பு உண்டு. இதேபோல், உயர் நீதிமன்ற நீதிபதியாக யாரை நியமிக்க வேண்டும் என பரிந்துரை செய்ய, மூன்று நீதிபதிகள் இடம் பெற்ற, ‘கொலிஜியம்’ உண்டு. அப்போது, சுப்ரீம் கோர்ட்டில், மூத்த நீதிபதிகளாக இருந்த மூன்று பேர், தலைமை நீதிபதி லகோட்டி, நீதிபதி ஒய்.கே.சபர்வால், நீதிபதி ரூமா பால். இவர்கள் இடம் பெற்ற, ‘கொலிஜியம்’ தான், மத்திய உளவுத்துறையின், எதிர்மறையான அறிக்கையை அடிப்படையாக வைத்து, அந்த கூடுதல் நீதிபதிக்கு, பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது என, பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரையும், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது, மத்தியில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்தது. இந்த கூட்டணியில் பெரிய கட்சியாக விளங்கியது, காங்கிரஸ் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அக்கட்சிக்கு, லோக்சபாவில் பெரும்பான்மை கிடையாது. கூட்டணி கட்சிகளின் ஆதரவு கண்டிப்பாக தேவை என்ற நிலையில், அக்கட்சி இருந்தது. அந்த கூட்டணியில் இடம் பெற்ற, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கட்சி தான், இந்த ஊழல் நீதிபதிக்கு ஆதரவு தெரிவித்து இருந்தது. அந்த கூடுதல் நீதிபதிக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட், ‘கொலிஜியம்’ பரிந்துரை செய்துள்ளது என, தெரிய வந்ததும், அதற்கு அக்கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது, நியூயார்க் நகரில், ஐ.நா., அமைப்பின் கூட்டம் நடக்க இருந்த நேரம். அதில் பங்கேற்க, பிரதமர் மன்மோகன் சிங், டில்லியில் இருந்து புறப்பட்டு கொண்டிருந்தார். டில்லி விமான நிலையத்தில், தமிழக கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் (காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றவர்கள்), பிரதமரிடம், ‘நீங்கள் நியூயார்க் நகரில் இருந்து திரும்பும் போது, உங்கள் அரசு கவிழ்ந்து விடும். ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அளித்து வரும் எங்கள் கட்சி, அந்த ஆதரவை வாபஸ் பெற உள்ளது (கூடுதல் நீதிபதிக்கு, பணி நீட்டிப்பு வழங்காததற்காக)’ என்று தெரிவித்ததாக, எனக்கு தகவல் கிடைத்தது. இதை கேட்டதும், மன்மோகன் சிங், அதிர்ச்சி அடைந்தார். ஆனால், காங்கிரசைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர் அவரிடம், ஓர் ஆண்டுக்கு… ‘இதற்காக கவலைப்பட வேண்டாம்; எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். பின்னர் அந்த மூத்த அமைச்சர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி லகோட்டியை சந்திக்கச் சென்றார். ‘கூடுதல் நீதிபதியை, அப்பொறுப்பில் இருந்து கழற்றி விட்டால், பிரச்னை ஏற்படும்’ என, தலைமை நீதிபதியிடம், அந்த மூத்த அமைச்சர் கூறியுள்ளார். இதை கேட்டதும், தலைமை நீதிபதி லகோட்டி, மத்திய அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். ஊழல் புகாருக்கு ஆளானவருக்கு, கூடுதல் நீதிபதியாக, மேலும் ஒரு ஆண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கும்படி, அந்த கடிதத்தில், தலைமை நீதிபதி கூறியிருந்தார். (‘கொலிஜியம்’ அமைப்பில் இடம் பெற்ற, மற்ற, இரண்டு மூத்த நீதிபதிகளுடன் இது குறித்து, தலைமை நீதிபதி கலந்து ஆலோசித்தாரா என்ற வியப்பு எனக்கு ஏற்பட்டது).

இப்படிபட்ட சூழ்நிலையில் தான், அந்த ஊழல் நீதிபதிக்கு, கூடுதல் நீதிபதியாக பணியாற்ற, மேலும், ஒரு ஆண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. (அதே நேரத்தில், அவர், ‘பேட்ஜ்’ஜைச் சேர்ந்த, மற்ற, ஆறு கூடுதல் நீதிபதிகளும், நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்). இதன் பின், அந்த கூடுதல் நீதிபதிக்கு மேலும் ஒரு ஆண்டு பணி நீட்டிப்பு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த, ஷபர்வாலால் வழங்கப்பட்டது. அதன் பிறகு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற கே.ஜி.பாலகிருஷ்ணன், அந்த கூடுதல் நீதிபதியை, நிரந்தர நீதிபதியாக நியமனம் செய்தார். ஆனால், மற்றொரு உயர் நீதிமன்றத்திற்கு, அவர் மாற்றம் செய்து, இந்த உத்தரவை பிறப்பித்தார். இவ்வாறு, மார்கண்டேய கட்ஜு, தன் இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 
எம்.பி.,க்கள் அமளி!
ராஜ்யசபா நேற்று காலை கூடியதும், கேள்வி நேரம் ஆரம்பமானது. அப்போது, அ.தி.மு.க., – எம்.பி., மைத்ரேயன் எழுந்து, பத்திரிகை செய்தியை காட்டி, ‘இந்த நீதிபதி நியமன விவகாரத்தில், நடந்த முறைகேடு குறித்து, சபையில் விவாதம் நடத்த வேண்டும்’ என, பிரச்னை கிளப்பினார். அதற்கு, ராஜ்யசபா தலைவர் ஹமீது அன்சாரி அனுமதி மறுக்கவே, அ.தி.மு.க.,வின் மற்ற எம்.பி.,க்களான நவநீதகிருஷ்ணன், சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த், லட்சுமணன், முத்துக்கருப்பன், அர்ஜுனன் உள்ளிட்டோர் ஒன்று திரண்டனர். சபைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட முயன்றதும், 10 நிமிடங்களுக்கு, சபை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் சபை கூடியபோது, அ.தி.மு.க., – எம்.பி.,க்கள், இதே பிரச்னையை எழுப்பி, கோஷமிட்டனர். இதையடுத்து, மிகுந்த அதிருப்தி அடைந்த சபைத் தலைவர் ஹமீது அன்சாரி, “சபை விதிகள் மீறப்படுகின்றன. எனவே, சபையை நடத்த முடியாது; ஒத்திவைக்கிறேன்,” என, அறிவித்து விட்டுச் சென்றார். பகல், 12:00 மணிக்கு மீண்டும் சபை கூடியபோது, இந்த பிரச்னையை, பெரிய அளவில் கிளப்பாமல், அ.தி.மு.க., – எம்.பி.,க்கள் விட்டுவிட்டனர். லோக்சபாவில், அ.தி.மு.க., – எம்.பி., தம்பித்துரை, இந்தப் பிரச்னையை கிளப்பினார்.

மார்க்கண்டேய கட்ஜுவின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் கட்சியும் விளக்கம் தர வேண்டும். ஏற்கனவே நீதித்துறை மீது, நிறைய ஊழல் புகார்கள் கூறப்படுகின்றன. கட்ஜு தற்போது தெரிவித்துள்ள புகாரால், தேசிய நீதி கமிஷன் அமைக்க வேண்டியது அவசியமாகிறது.

டி.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

கட்ஜு தெரிவித்துள்ள குற்றச்சாட்டு மிக மோசமானது. அவரின் குற்றச்சாட்டு குறித்து, விசாரணை நடத்தப்பட வேண்டும். அதில், உண்மை இருந்தால், நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நீதிபதிகள் நியமனத்தில், எந்த சூழ்நிலையிலும், அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகளின் தலையீடு இருக்கக் கூடாது.

மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சி