ஜனவரி 06, அமெரிக்காவைச் சேர்ந்த வணிக பத்திரிகையான போர்ப்ஸ் சமூக நிறுவனர்கள், அறிவியல், கலை மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்து வரும் இளம் தொழில் அதிபர்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இதில் சுமார் 600 ஆண்கள் மற்றும் பெண்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் இந்தியர்களும், இந்திய வம்சாவளியினருமாக 45 தொழில் அதிபர்கள் இடம் பெற்றுள்ளனர்.
நுகர்வோர் துறையில், ஓயோ ரூம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமான ரித்தேஷ் அகர்வால் இடம் பிடித்துள்ளார். இவருக்கு வயது 22. இவர் இந்தியாவில் 100 நகரங்களில் 2,200 சிறிய ஓட்டல்களை நிர்வகித்து வருவதற்காக இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ககன் பியானி (28 வயது), நீரஜ் பெர்ரி (28 வயது), கரிஷ்மா ஷா (25 வயது) ஆகியோரும் இந்த துறையில் சாதனை படைத்து இப்பட்டியலில் இணைந்துள்ளனர்.
பொழுதுபோக்கு துறையில் (ஹாலிவுட் உள்பட) லில்லி சிங் (27 வயது), வங்கித் துறையில் நீலாதாஸ் (27 வயது), முதலீட்டு ஆலோசனை துறையில் திவ்யா நெட்டிமி (29 வயது), விகாஸ் பட்டேல் (29 வயது), நீல் ராய் (29 வயது) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். துணிகர முதலீட்டுப் பிரிவில், இந்திய வம்சாவளியினரான விஷால் லுகானி (26 வயது), அமித் முகர்ஜி (27 வயது) ஆகியோர் உள்ளனர்.