டிசம்பர் 18, வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை நகரை பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையா நாயுடு கடந்த 12 மற்றும் 13-ந் தேதிகளில் நேரில் ஆய்வு செய்தார். வேளச்சேரி, ராம்நகர்,
முடிச்சூர் சாலை, ஈக்காட்டுதாங்கல், சிந்தாதிரிப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுடன் பேசினார். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். அவரிடம் சேத விவரங்களை
முதல்-அமைச்சர் எடுத்துக் கூறினார். இந்நிலையில், டெல்லிக்கு திரும்பிய வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து, தமிழக வெள்ள பாதிப்பு பற்றி எடுத்துக் கூறினார். தமிழகத்தில் நடந்து
வரும் நிவாரண மற்றும் மறுவாழ்வு பணிகள் பற்றி விளக்கம் அளித்தார். மேலும், அம்பத்தூர் தொழில்பேட்டையில் உள்ள ஏராளமான சிறு மற்றும் நடுத்தர ரக தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு
இருப்பதாகவும் வெங்கையா நாயுடு கூறினார். அந்த நிறுவனங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக அவற்றுக்கு காப்பீட்டு பணம் விரைவில் கிடைக்க மத்திய நிதி மந்திரியும், மத்திய சிறு தொழில் மந்திரியும் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.