நவம்பர் 24, இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் கடந்த 21ஆம் திகதி மலேசியவிற்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டு நேற்று மாலை 5.00 மணிக்கு சிங்கைக்குத் திரும்பியுள்ளார்.
ஆசியான் மாநாட்டிற்காக அவர் இங்கு வருகையளித்ததை அடிப்படையாக வைத்துக் கொண்டு, நேற்று இரண்டு நாட்டுப் பிரதமர்களும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
அந்தப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இரு நாடுகளுக்கிடையில் இருக்கக்கூடிய உறவை மேலும் எவ்வாறு வலுப்படுத்த முடியும் என்று பல கோணங்களில் ஆராயப்பட்டுள்ளது.
இந்தியா பல துறைகளில் துரிதமான வளர்ச்சியை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சாலைகளில் அடிப்படை போக்குவரத்து வசதிகளோடு அந்நாட்டில் ஏறக்குறைய 5 கோடி அளவிலான வீடமைப்புத் திட்டங்கள் உருவாக்க வேண்டும் என்று திட்டம் வகுத்துள்ளார்கள். அதேநேரத்தில், தொலை தொடர்பு சாதனங்கள், தொலை தொடர்பு வாய்ப்புகளும் வசதிகளும் இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா நகரங்களுக்கும் செல்ல வேண்டும் என்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த மேம்பாட்டுத் திட்டங்களிம் மலேசியாவில் இருக்கக்கூடிய நிறுவனங்கள் எவ்வாறு இத்திட்டங்களில் பங்கேற்கலாம் என்பதும் ஆராயப்பட்டுள்ளது.
அதேபோல், மலேசிய மேம்பாட்டுத் திட்டங்களான இரயில் சேவை மேம்பாட்டுத் திட்டங்கள் எவ்வாறு இந்திய நிறுவனங்கள் பங்கு கொள்ளலாம் என்பது பற்றியும் ஆராயப்பட்டுள்ளது. கல்வித்துறையில் இப்பொழுது இருக்கக்கூடிய தொடர்புகளையும் ஒத்துழைப்பையும் இன்னும் அதிகரித்து இந்தியாவில் சிறந்த பல்கலைகழகப் பட்டப்படிப்பிற்கு இங்கு அங்கீகாரம் வழங்க முடியும். அதன் மூலமாக இங்கிருந்து கூடுதலான மாணவர்கள் அங்கு சென்று படிக்கக்கூடிய வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்தும் ஆராய்ந்துள்ளோம்.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்பொழுது இரு நாடுகளுக்கிடையில் இருக்கக்கூடிய உறவு இன்னும் மேம்பாடு காண வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதன் சான்றாக, இன்று இரு நாட்டுப் பிரதமர்களும் பிரிக்பீல்டில் “துரோனா’ நுழைவாயிலை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தனர். இந்நாட்டு இந்தியர்களின் அடையாள சின்னமாக மட்டுமின்றி மலேசியாவில் உள்ள கலாச்சாரத்தையும் ஒற்றுமையையும் பிரதிபலிக்கும் வண்ணமாகவும் இது அமைந்துள்ளது.
நேற்று இந்தியப் பிரதமர் அவர்கள் மலேசிய தொழில் முனைவர்களுடனான ஒரு சந்திப்புக் கூட்டத்திலும் கலந்து கொண்டார். இச்சந்திப்புக் கூட்டத்தில் இங்குள்ள தொழில் முனைவர்கள் இந்தியாவில் தொழில் மேற்கொள்ளும் வாய்ப்புகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் ஆயுர்வேத மருத்துவ முறையைத் தொடர்ந்து விரிவுப்படுத்துவது குறித்தும் இரு நாட்டுப் பிரதமர்களால் இன்று கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் எனும் முறையில் இத்திட்டத்தினை சிறந்த முறையில் செயல்படுத்துவதற்கான ஆயத்த முயற்சிகளைச் சுகாதார அமைச்சு மேற்கொள்வதை உறுதி செய்வேன்.
இந்தியப் பிரதமரின் இந்த அதிகாரப்பூர்வ வருகையின் அடிப்படையிலும் புரிந்துணர்வு அடிப்படையிலும் சகோதரத்துவ உணர்வு அடிப்படையிலும் இந்தியா – மலேசியா இடையேயான உறவு பல மடங்கு வலுவடைந்து நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கும் என்று நிச்சயமாக நம்புகிறேன். எனவே, அவரின் இந்த அதிகாரப்பூர்வ வருகைக்கு எனது நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.