ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கேரளா சென்றார்.
திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் சென்றடைந்த ஜனாதிபதிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மேலும் பாதுகாப்பு பணியும் பலப்படுத்தப்பட்டு இருந்தது.
மிக முக்கிய பிரமுகர்கள் மட்டும் விமான நிலையத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டு இருந்தனர். ஜனாதிபதி விமானத்தில் இருந்து இறங்கியதும், கேரள முதல்வர் உம்மன்சாண்டி, கவர்னர் ஷீலா தீட்சித், திருவனந்தபுரம் மேயர் உள்பட சிலர் மட்டும் அவரை வரவேற்க அனுமதிக்கப்பட்டனர்.
கேரள சட்டசபை சபாநாயகர் கார்த்திகேயன், மந்திரிகள் ரமேஷ் சென்னிதலா, சிவக்குமார் ஆகியோரை பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தின் அருகே செல்ல அனுமதிக்கவில்லை. போலீஸ் அதிகாரிகள் அருகே நிறுத்தி விட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறி அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.
இதனால் ஜனாதிபதி வரவேற்பு நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற பத்மநாபசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்யும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அதன் பின்பு தனி விமானம் மூலம் பிற்பகல் திருச்சி புறப்பட்டு செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அவர், டெல்லி புறப்பட்டு செல்கிறார்.