தீபாவளி முன்பதிவு: ரெயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன

தீபாவளி முன்பதிவு: ரெயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன

Train

தீபாவளி பண்டிகை இந்த வருடம் அக்டோபர் மாதம் 22-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து தீபாவளிக்கு 4 நாட்களுக்கு முன்பு, அதாவது அக்டோபர் 17-ந் தேதி பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 

கடந்த காலங்களை காட்டிலும் இந்த வருடம் முன்பதிவு சற்று மந்தமாகவே இருந்தது. நெல்லை, முத்துநகர், பொதிகை, பாண்டியன் ஆகிய 4 ரெயில்களை தவிர மற்ற ரெயில்களில் நேற்று மாலை வரை அதிகமான டிக்கெட்டுக்கள் முன்பதிவு ஆகாமல் இருந்தன. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பெரும்பாலான பயணிகள் வீடுகள், அலுவலகங்கள், செல்போன் இணையதள வசதி மூலமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர். இதனால் ரெயில் நிலையங்களுக்கு வந்து முன்பதிவு டிக்கெட்டுகள் எடுக்க வந்த பயணிகள் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது. 

தீபாவளி பண்டிகைக்கு 3 நாட்கள் முன்கூட்டி சொந்த ஊர் செல்வதற்கான அதாவது, அக்டோபர் 18-ந் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 

தீபாவளி டிக்கெட் விற்பனை மந்தம் அடைவதற்கான காரணம் குறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், தீபாவளி பண்டிகைக்கு செல்ல பெரும்பாலான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆர்வம் காட்டவில்லை. இதற்கு காரணம் ரெயில்வே டிக்கெட்டை ரத்து செய்து பணத்தை திரும்ப பெறுவதில் சில முரண்பாடான விதிமுறைகளை கொண்டுவந்துள்ளதே ஆகும்.

ஏதாவது தவிர்க்க முடியாத காரணத்தால் முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்ய நேரிடும்போது டிக்கெட் தொகையை விடவும் குறைவான தொகையே பயணிகளுக்கு திரும்ப கிடைக்கிறது. இதனை காரணம் காட்டியே சில பயணிகள் முன்பதிவு செய்யவில்லை என்றார்.