ஐ.நா. வேண்டுகோளை ஏற்று மனிதாபிமான அடிப்படையில், 5 மணி நேரத்திற்கு தாக்குதலை நிறுத்திக் கொள்ள இஸ்ரேலிய படைகளும், ஹமாஸ் அமைப்பும் ஒப்புக் கொண்டுள்ளன.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை குறிவைத்து இஸ்ரேல் கடந்த 9 நாட்களாக வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில், பாலஸ்தீனியர்கள் 226 பேர் பலியாகியுள்ளனர்.
காஸா கடற்கரைப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4 சிறுவர்கள் பலியாகினர்.
இதனையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஐ.நா. சிறப்பு ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் செரி, மனிதாபிமான அடிப்படையில் சிறிது நேரம் தாக்குதலை நிறுத்திக் கொள்ளுமாறு இஸ்ரேல் தரப்பிடம் கோரிக்கை விடுத்தார்.
இதேபோல், ஹமாஸ் தரப்பிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து, வியாழன் காலை 10 மணி முதல் பகல் 3 மணி வரை தாக்குதலை நிறுத்திக் கொள்ள இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளது. ஹமாஸ் செய்தி தொடர்பாளர் சமி அபு ஜூரி செல்போன் குறுந்தகவல் மூலம் இதனை உறுதி செய்துள்ளார்.
இஸ்ரேலிய படைகளும் இதற்கு ஒப்புக் கொண்டிருந்தாலும், இந்த 5 மணி நேரத்தில் ஹமாஸ் தரப்பில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டால் நிச்சயமாக தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிக்கை வெளியிட்டுள்ளது.