கூடங்குளம் வருமாறு புடினுக்கு மோடி அழைப்பு

கூடங்குளம் வருமாறு புடினுக்கு மோடி அழைப்பு

z_wld800

போர்டலிசா: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை நேற்று முன்தினம் இரவு சந்தித்து பேசினார்.பிரிக்ஸ் மாநாட்டு நிகழ்ச்சிகள் முடிந்ததும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, நரேந்திர மோடி நேற்று முன்தினம் இரவு சந்தித்து பேசினார். இருவரும் சுமார் 40 நிமிடங்கள் பேசினர். புடினிடம் மோடி கூறியதாவது: இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை ரஷ்யாவுடன் நல்லுறவு வைத்திருக்கிறது. மேலும், இந்தியாவின் சிக்கலான நேரங்களில் ரஷ்யா உதவியிருக்கிறது. 

இந்தியாவின் சிறந்த நண்பர் யார் என்று இந்தியாவில் உள்ள சின்னக் குழந்தையிடம் கேட்டால் கூட, ரஷ்யா’ என்றுதான் பதிலளிக்கும். அணுசக்தி, ராணுவம், மின்சார உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம். அதேபோல், விசா விதிகளை ரஷ்யா தளர்த்த வேண்டும். குறிப்பாக, உயர் கல்வி கற்க வரும் மாணவர்களுக்காக விசா விதிகளை தளர்வு செய்ய வேண்டும். வரும் டிசம்பரில் இந்தியாவுக்கு நீங்கள் வரும்போது, டெல்லியைத் தவிர மற்ற நகரங்களுக்கும் சென்று பார்க்க வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வந்து பார்வையிட வேண்டும்.

இவ்வாறு மோடி கூறினார். அணுசக்தி உள்பட பல்வேறு துறைகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும்,  மாணவர்களுக்கான விசா விதிகளை தளர்வு செய்வது பற்றி பரிசீலிப்பதாகவும் புடின் தெரிவித்தார். மேலும், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வருவதாக கூறிய அவர், கூடங்குளம் 2வது அணு உலை திட்டம் பற்றியும் குறிப்பிட்டார்.