உத்தரகாண்ட்டில் பலத்த மழை: ராம்தேவ்–400 சீடர்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு

உத்தரகாண்ட்டில் பலத்த மழை: ராம்தேவ்–400 சீடர்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு

sunset

இமயமலை பிரதேசமான உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு 3 நாட்கள் இடைவிடாது பெய்த பேய் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரழிவு ஏற்பட்டது.

இதில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். மலைப்பாதையில் சாலைகளும், கேதார்நாத் கோவிலும் சேதம் அடைந்தது. அங்கு சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை.

கேதார்நாத் கோவில் சீரமைக்கப்பட்டு மீண்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பே உத்தரகாண்ட்டில் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து அங்கு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் தொடர் மழையால் பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரியில் சாலைகளில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

உத்தரகாண்ட்டின் கீழ்பகுதியான ஸ்ரீநகர் பகுதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. கடந்த ஆண்டு பேரழிவு ஏற்படுத்திய அலக்நந்தா ஆற்றில் வெள்ளம் அபாய அளவை கடந்து ஓடுகிறது.

உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் யோகா மையம் நடத்தி வரும் பாபாராம்தேவ் தனது யோகா மையத்தில் பயிலும் 400 மாணவர்களை கங்கோத்ரிக்கு ஆன்மீக சுற்றுலா அழைத்துச் சென்றார். அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் ராம்தேவும், 400 சீடர்களும் கங்கோத்ரியில் சிக்கி தவிக்கிறார்கள்.

இதற்கிடையே பெரு வெள்ளம் காரணமாக கேதார்நாத் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை நீடிப்பதால் நாளை வரை கேதார்நாத்துக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ருத்ரபிரயாக் மாவட்ட கலெக்டர் ராகவ் லாங்கர் தெரிவித்தார்.

இதே போல் உத்தர்காசி மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் பியோஷ்ராவு தெல்லா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆறுகளில் வெள்ளம் அபாய அளவை தாண்டி ஓடுவதால் வெள்ள நிலைமை குறித்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ருத்ர பிரயாக், உத்தர்காசி மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இதே போல் இமய மலையின் மற்றொரு பகுதியில் உள்ள இமாசலப் பிரதேச மாநிலத்திலும், கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.