மார்ச் 6, மக்களுக்கு சேவை செய்கிறார்களோ இல்லையோ தங்களது அரசியல் வாழ்க்கையை நடத்த எதிர்கட்சி இந்திய தலைவர்களுக்கு குறிப்பாக பினாங்கு ராமசாமி போன்றோருக்கு எப்பொழுதும் ம.இ.கா தேவை. அது குற்றம் இது குற்றம் என்று பேசி பேசியே வடை சுட்டு விற்பதில் அசாத்திய சாதனை பினாங்கு ராமசாமிக்கு உண்டு.
இப்பொழுது ம.இ.காவில் நடத்துக்கொண்டிருப்பது தலைமைத்துவ மாற்றம் கட்சியை வலுப்படுத்தவும், சீராக செயலாற்றவும் இந்த மாற்றம் தேவை. 2020க்கு இன்னும் 5 ஆண்டுகளே எஞ்சியுள்ள நிலையிலும், தேசிய முன்னணியில் இந்தியர்களை பிரதிநிதிக்கும் ஒரே கட்சி என்கிற முறையிலும் இந்த மாற்றம் இப்பொழுது கட்டாயம். இது உலகில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சியிலும் நடக்கும் ஒரு தவிர்க்க முடியாத ஒரு விசயம். இதற்கு உலக அரசியல் தெரிந்திருக்கவேண்டும் ம.இ.காவில் இத்தலைமைத்துவ மாற்றங்கள் கண்டு வலுப்பெற்றால் ராமசாமி போன்றோர் பேசுவதற்கு ஏதுமில்லாமல் போய்விடுமே. அதனால் ம.இ.காவின் மேல் தீடிர் பாசம் வந்தது போலும், நியாயம் பேசும் நட்டாமை போலும் ம.இ.காவின் பிரச்சனைகளுக்கு கருத்து சொல்ல வந்துவிட்டார்கள். இது வேண்டாம், எங்கள் கட்சிப் பிரச்சனை நாங்கள் பார்த்துகொள்கிறோம் என்று தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவர் ச.சிவராஜ் அவர்கள் கூறியதற்கு, பினாங்கு மாநில ஜசெக சோசலிச இளைஞர் பிரிவு துணைசெயலாளர் சதிஷ் நேற்று எதிர் அறிக்கை விடுத்துள்ளார்.
சகோதரர் சதிஷ் அவர்களே, உங்க வீட்டு பிரச்சனைக்குள் நான் வந்தாலும், என் வீட்டு பிரச்சனைக்குள் நீங்க வந்தாலும் அதற்கு பெயர் அநாகரீகம். அரசியல் லாபம் தேட வேண்டும் என்று இப்பிரச்சனைக்குள் நீங்கள் மூக்கு நுழைத்தால், பிறகு உங்களுக்கும் ஊர் இரண்டுப்பட்டால் கொண்டாடும் கூத்தாடிக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும். ஆக இப்பிரச்சனையை விடுத்து, உங்களது நேரத்தையும் பதவியையும் வைத்து மக்களுக்கு குறிப்பாக பினாங்கு இந்தியர்களுக்கு என்ன சேவை செய்யலாம் என்று செலவிடுங்கள் காரணம் இப்பிரச்சனையை தீர்ப்பதற்கும் கருத்து தெரிவிப்பதற்கும் ம..இ.கா உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆகவே உங்களது பொதுநல கருத்துகளுக்கும் நன்றி.
நீங்கள் மறைத்தாலும் மறுத்தாலும், மலேசியாவில் வாழும் இந்தியர்களுக்கு ம.இ.காத்தான் தாய்க்கட்சி. இந்தியர்களை மட்டுமே கருத்தினில் வைத்து போராடும் ஒரே கட்சி, தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவர் ச.சிவராஜ் கீழ் இயங்கும் ம.இ.கா இளைஞர் பிரிவு கடந்த ஒரு வருடம் ஆற்றிய சேவைகள் ஊர் அறியும். இந்தியர்களின் பிரச்சனை என்று வரும்போது உள்களது கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. ஆனால் இது ம.இ.காவிற்குள் நடக்கும் உட்கட்சிப்பூசல். அதைப்பற்றி கருத்துத் தெரிவிக்க நீங்கள் ம.இ.காவில் அங்கத்துவம் பெற்றிருக்க வேண்டும். ஆக அரசியல் முதிர்ச்சி இன்றி அறிக்கை விட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.