ஹபீஸ் சயீத்தை சந்தித்தவர் ஆர்எஸ்எஸ் ஆள் அல்ல: ராம் மாதவ்

ஹபீஸ் சயீத்தை சந்தித்தவர் ஆர்எஸ்எஸ் ஆள் அல்ல: ராம் மாதவ்

rama

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் நடத்திய அதிபயங்கர தாக்குதல்களை மூளையாக இருந்து இயக்கியவன், ஹபீஸ் சயீத். லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தாய் நிறுவனமான ஜமாத் உத் தவாவின் தலைவன்.

இந்த ஹபீஸ் சயீத்தை, பாகிஸ்தானுக்கு பத்திரிகையாளர் என்ற முறையில் சக பத்திரிகையாளர்களுடன் சென்ற யோகா குரு பாபா ராம்தேவின் உதவியாளர் வேத பிரதாப் வேதிக், லாகூரில் கடந்த 2-ந் தேதி சந்தித்துப் பேசி உள்ளார். இது தொடர்பான படம் ஊடகங்களில் வெளியானதும் சர்ச்சை உருவாகி உள்ளது. இந்த விவகாரம் 2 நாட்களாக பாராளுமன்றத்தில் அமளியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, நேற்று நிருபர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ இப்போது எழுந்துள்ள கேள்வி, வேதிக்-ஹபீஸ் சயீத் சந்திப்புக்கு அங்குள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்ததா, இல்லையா என்பதுதான். இந்த சந்திப்புக்கு இந்திய தூதரகம் ஏற்பாடு செய்ததா என்பது குறித்து அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம். எந்த விதத்தில் இவர்களுக்கு அவர்கள் உதவி இருந்தாலும், அதை அறிந்துகொள்வதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்” என கூறினார்.

ஒரு கேள்விக்கு ராகுல் பதில் அளிக்கையில், “ஆமாம், அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். ஆள்தான். அது எல்லோரும் அறிந்த உண்மை” என்று கூறினார். 

ஆனால் வேத பிரதாப் வேதிக், ஆர்.எஸ்.எஸ். ஆள் என்பதை அந்த இயக்கம் மறுத்துவிட்டது. இதுபற்றி அந்த இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராம் மாதவ் நேற்று கூறும்போது, “வேதிக்கிற்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் உறவு இல்லை. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மணி சங்கர் அய்யர், சல்மான் குர்ஷித் ஆகியோரை சுற்றி வந்த அவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர் அல்ல” என கூறினார். 

மேலும் அவர், “எப்படி இருந்தாலும் ஹபீஸ் சயீத் ஒரு தீவிரவாதிதான். இந்தியாவைப் பொருத்தமட்டில் அவர் ஒரு கிரிமினல். அவர் இந்தியாவுக்கு எப்போது வந்தாலும், இந்திய சட்டப்படியும், நீதிமுறைமையின்படியும் அவர் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படுவார்” என கூறினார்.