மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு புறப்பட்ட விமானம் கடந்த 7–ந்தேதி மாயமாகிவிட்டது. அதில் இருந்த 239 பயணிகள் கதி என்ன என்று தெரிய வில்லை. மாயமான விமானம் கடலில் விழுந்து இருக்கலாம் என கருதி 14 நாடுகளை சேர்ந்த 58 விமானங்கள், 43 கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. ஆனால் மாயமாகி 9 நாட்களாகியும் விமானம் பற்றிய தகவல் தெரியவில்லை.
தென் சீன கடல் பகுதியில் விமானத்தின் பாகங்கள் கிடைக்க வில்லை. எனவே, அது இந்திய பெருங்கடலில் அந்தமான் நிகோபர் பகுதியில் விழுந்திருக்கலாம் என அமெரிக்கா தெரிவித்தது. எனவே, தேடும் பணியில் இந்தியா உதவியை மலேசியா நாடியது. அதை தொடர்ந்து இந்திய கடற்படை 6 போர்க்கப்பல்கள் மற்றும் 4 விமானங்கள் மூலம் அந்தமான் கடலில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், இந்திய பகுதியில் மாயமான மலேசியாவின் எம்.எச். 370 ரக விமானம் பறக்க வில்லை. அதற்கான அறிகுறி எதுவும் இல்லை என ராணுவ அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத், சென்னை, மும்பை ஆகிய 5 விமான நிலையங்களில் ரேடார் கருவிகளை இந்திய விமானப்படை அமைத்துள்ளது. அவற்றில், மலேசிய விமானம் இந்திய பகுதியில் பறந்ததற்கான எந்த பதிவும் இடம் பெற வில்லை என கூறியுள்ளனர்.
இதற்கிடையே மாயமான விமானம் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் செல்லும் வழியில் திசைமாறி கடத்தப்பட்டிருக்கலாம் என மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து விமானம் மாயமானது குறித்து கிரிமினல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன் அமைச்சரவையில் துணை மந்திரி ஆக இருந்த ஸ்ட்ரோப் தல்போத் கருத்து வெளியிட்டுள்ளார். மலேசிய விமானம் மர்மமான முறையில் வேறு திசையில் பயணம் செய்துள்ளது. மேலும் எரிவாயு நிரப்பிய தன்மை போன்றவைகளை வைத்து பார்க்கும் போது பல சந்தேகங்கள் எழுகின்றன.
விமானத்தை கடத்தியவர்கள் கஜகஸ்தான் வழியாக துர்க்மெனிஸ்தான் செல்லும் வழியில் அமெரிக்காவின் நியூயார்க்கில் அல் கொய்தா தீவிரவாதிகள் நடத்தியது போல் இந்திய நகர கட்டிடத்தில் விமானத்தை மோதி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை சி.என்.என். டெலிவிஷன் வெளியிட்டது. அவரது கூற்றுபடி பார்த்தாலும் இந்தியாவில் எந்தவொரு நகர கட்டிடத்திலும் விமானம் மோத வில்லை. அப்படியென்றால் தற்போது அங்கு எங்கே இருக்கிறது. மாயமாகி 8 நாட்களாகியும் அதன் மர்மம் இன்னும் விலகாமல் தொடர்கிறது. மாயமான விமானத்தில் பயணம் செய்தவர்களில் 156 பேர் சீனர்கள். ஆனால் விமானம் பற்றிய தகவல்களை மலேசியா சரிவர தெரிவிக்க மறுப்பதாக பயணிகளின் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், மலேசிய அரசு மீது வழக்கு தொடரப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.