ஜொகூர் மாநில தாமான் செம்பாகா தேசிய பள்ளியில் பயிலும் இந்திய மாணவரான ஷ்ரிடி ராம் மலாய் பாஷையில் சரியாக பதிலளிக்க முடியவில்லை என்பது போல தவறாக வீடியோ பதிவு செய்து அதை இணையத்தில் பரப்பிய அந்த பள்ளியின் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவும் ஜொகூர் மாநில ம.இ.கா இளைஞர் பிரிவும் இணைந்து ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் துணை தலைவர் திரு. தினாளன் T. ராஜகோபாலு அவர்களின் தலைமையில் மாவட்ட கல்வி இலாகாவின் துணை இயக்குநர் துவான் ஹஜி அப்துல்லா அவர்களை நேற்று (12/02/2015) சந்தித்தனர்.
தவறு செய்த அந்த ஆசிரியர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி இலாகா எங்களிடம் தெரிவித்துள்ளது. மேலும் தகுந்த நடவடிக்கை எடுக்காமலும் பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்தாரிடம் கடுமையாகவும் நடந்துகொண்ட அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.
ஷ்ரிடி ராமின் தாயார் அவரை தமிழ் பள்ளிக்கு (துன் அமினோ தமிழ் பள்ளி) மாற்றுவது என முடிவு செய்துள்ளார். இதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் எனவும் துணை இயக்குநரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். இந்த விவகாரத்தில் தக்க ஆலோசனை வழங்கிய கல்வித் துறை துணை அமைச்சர் மாண்புமிகு கமலநாதன் அவர்களுக்கு எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவு 12 பிப்ரவரி 2015 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.