ஜனவரி 21, அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் ‘ஜ’ திரைப்படத்திற்கு சென்னையில் திருநங்கைகள் அமைப்பினர், தங்கள் சமுதாயத்தை இழிவுபடுத்தி காட்சிகளை அமைத்திருப்பது தொடர்பாக பலத்த கண்டனத்தைத் தெரிவித்து வரும் வேளையில், மலேசிய தமிழ் திருநங்கைகள் சங்கத்தின் தேசியத் தலைவி சூரியா ராமையா அம்மா தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.
’ஜ’ திரைப்படம் மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் பல வருடங்களாக திருநங்கை சமூகத்தினரைக் கேலிபடுத்துவதுபோல் பல காட்சிகளை அமைத்து வருகிறார்கள். இப்படிப்பட்ட செயல்களை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இனிவரும் காலங்களில் தவறான கண்ணோட்டத்தில் திருநங்கைகளைச் சித்தரிக்கும் காட்சிகள் திரைப்படங்களில் இடம்பெறக்கூடாது. திருநங்கைகளின் சவால்கள் வாழ்க்கையில் அவர்கள் எப்படி வெற்றிபெறிகிறார்கள் போன்ற காட்சிகள் திரையிடப்பட வேண்டும். உதாரணத்திற்கு ‘காஞ்சனா’ திரைப்படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். எப்படி இந்தச் சமுதாயத்தில் சவால்களை எதிர்கொண்டு திருநங்கைகள் வெற்றிபெறுகிறார்கள் போன்ற காட்சிகள் மதிக்கத்தக்கதாகவும், மரியாதைக்குரியதாகவும் மக்களிடையே சென்றடைந்தது. அப்படிப்பட்ட கட்சிகளை திரையிடுங்கள். தவறான கண்ணோட்டத்தை இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என கூறிய சூரியா ராமையா அம்மா, இனி இப்படிப்பட்ட காட்சிகள் இடம்பெற்றால், அத்திரைப்படம் மலேசியாவில் வெளியிடப்படும்போது தணிக்கைப்பிரிவு அப்படிப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
செய்தி உதவி:வெற்றி விக்டர்.