100 நாள் ஆட்சிக்குப் பின் இலங்கையில் பொதுத்தேர்தல்: அதிபர் சிறிசேன

100 நாள் ஆட்சிக்குப் பின் இலங்கையில் பொதுத்தேர்தல்: அதிபர் சிறிசேன

Maithripala

ஜனவரி 13, இலங்கையில் தற்போது இடைக்கால அமைச்சரவை அமைக்கப்பட்டு உள்ளதாகவும், 100 நாள் ஆட்சிக்குப்பின் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார். இலங்கையில் புதிய அமைச்சரவை நேற்று அதிபர் சிறிசேன முன்னிலையில் பதவி ஏற்றது. பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். அவருக்கு திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டது. அவருடன் சேர்த்து 27 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 10 பேர் இணை அமைச்சர்களாகவும், 8 பேர் துணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். இந்நிகழ்ச்சிக்குப்பின் பேசிய அதிபர் சிறிசேன கூறியதாவது:

தற்போது அமைந்துள்ள அமைச்சரவை தற்காலிகமானது. 100 நாள் ஆட்சிக்குப்பின் இலங்கையில் பொதுத் தேர்தல் நடத்தப்படும். அதன்பின் நியமனம் செய்யப்படுபவர்கள்தான் நிரந்தர அமைச்சர்கள். இதை மனதில் வைத்துக் கொண்டு தற்போது பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் திறமையாக செயல்பட வேண்டும். ஊழல் மற்றும் தவறான நடத்தையை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். மக்களுக்கு பணியாற்றுவதில் புதிய அமைச்சர்கள் முன் மாதிரியாக திகழ வேண்டும். முறைகேடு மற்றும் ஊழலில் ஈடுபடும் அமைச்சர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதிபர் சிறிசேன பேசினார்.