தீவிர காற்றழுத்த பகுதி நீடிப்பதால் இன்றும் மழை நீடிக்கும்

தீவிர காற்றழுத்த பகுதி நீடிப்பதால் இன்றும் மழை நீடிக்கும்

rain3

டிசம்பர் 30, சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த அடை மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சென்னையில் கடந்த சில நாட்களாக மிதமான வெயில் நிலவி வந்தது. கடந்த 2 நாட்கள் பெய்த அடை மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று இரவு மழையோடு காற்றும் அதிகமாக வீசியதால் சாலையில் சென்ற வாகனங்கள் தடுமாறின. தொடர் மழையால் கடுமையாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

சென்னையில் பல இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதே போல் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம், கல்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் அடை மழை பெய்தது. திருவள்ளூர் மாவடத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் விடுமுறைக்கு பின் இன்று திறக்க இருந்த பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து வட இலங்கை மற்றும் தமிழகத்தை ஒட்டியுள்ள வங்கக்கடல் கடல் பகுதியில் நீடிப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்றும் மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.