பேருந்துகள் மீது கல்வீச்சு: தமிழகம் ஸ்தம்பித்தது

பேருந்துகள் மீது கல்வீச்சு: தமிழகம் ஸ்தம்பித்தது

PMK-Bandh

டிசம்பர் 29, போக்குவரத்து தொழிலாளர்களின் திடீர் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. பல இடங்களில் பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் பயணிகள் அலறியடித்தபடி ஓடினர். போக்குவரத்து பணிமனைகளில் ஆளும் மற்றும் எதிர் கட்சிகளின் தொழிற்சங்க நிர்வாகிகள் மோதிக் கொண்டனர். இதில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தமிழகத்தின் முக்கிய பஸ் நிலையங்கள் மற்றும் ரயில்நிலையங்களில் வந்த பயணிகள் வீடு, மருத்துவமனை மற்றும் பிற இடங்களுக்கு செல்ல முடியவில்லை. வசதி படைத்தவர்கள் கால்டாக்சி, ஆட்டோக்கள் மூலம் வீடுகளுக்கு போய் சேர்ந்தனர். மற்றவர்கள் அரசு பஸ்களுக்காக ஏங்கித் தவித்தனர். மாவட்டங்களில் தனியார் இயக்கிய பஸ்களில் மக்களின் கூட்டம் திருவிழாபோல அலைமோதியது. மேலும், தபால் துறை சார்பில் நடந்த தேர்வில் பலர் பங்கேற்க முடியவில்லை. எனவே, அவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், கோவை உள்பட 8 அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் ஒரு லட்சத்து 42 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர். இவர்களுக்கான 11வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு 30.8.2013ல் முடிவடைந்தது. எனவே, 12வது ஊதிய ஒப்பந்தம் 1.9.2013ல் அமலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு இதில் ஆர்வம் காட்டவில்லை. மேலும் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை காரணம் காட்டி பேச்சு வார்த்தையை தள்ளி வைத்து கொண்டே வந்தது. இதனால் ஊழியர்களுக்கு உரிய காலத்தில் சம்பள உயர்வு கிடைக்கவில்லை.