டிசம்பர் 24, கடந்த சில வாரங்களாக கிளாந்தான் மாநிலத்தில் பல பகுதிகளில் கடுமையான வெள்ளம் எற்பட்டுள்ளது. இந்நிலையில், இம்மாநிலத்தில் வெள்ளத்தின் நிலை இன்னும் மோசமடையவிருப்பதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கிளாந்தான் மாநிலத்தில் அமைந்துள்ள குவா மூசாங் மற்றும் குவா தெராய் பகுதிகள் மோசமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து குவா மூசாங்கில் அமைந்துள்ள சிறு பட்டணம் ஒன்று முழுமையாக வெள்ளத்தால் மூழ்கி ஒரு புதிய தீவாகத் தெரிவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இம்முறை இதற்கு முன் வெள்ளத்தால் பாதிக்கப்படாதப் பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். கிளாந்தானில் உள்ள சுங்கை காலாஸ், டாபோங், சுங்கை லெபே, துஆலாங், சுங்கை கோலோக், ரந்தாவ் பஞ்சாங் போன்ற ஆறுகளிலும் வழக்கத்திற்கு மீறிய நீரோட்டம் ஏற்பட்டுள்ளது. கிளாந்தான் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனத்த மழை வரும் 28 டிசம்பர் மாதம் வரைத் தொடரும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.