டிசம்பர் 23, மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில், உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாதந்தோறும் அமாவாசையன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். மார்கழி மாத அமாவாசை விழா நேற்று முன்தினம் நடந்தது. அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. அம்மனுக்கு பலவித பூக்களாலான மாலைகள் அணிவிக்கப்பட்டு 8 கரங்கள் வைத்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
இரவு 11.30 மணியளவில் கோயில் கருவறையில் இருந்து உற்சவ அம்மன் பல்லக்கில் பம்பை, மேளதாளம் முழங்க ஊஞ்சல் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டார். இடது கையில் கூடை, வலது கையில் வேப்பிலையுடன் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து தாலாட்டு பாடல்கள் பாடப்பட்டன. தேங்காய், எலுமிச்சம் பழம் மீது கற்பூரம் ஏற்றி பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். தீபாராதனையுடன் ஊஞ்சல் உற்சவம் முடிவடைந்தது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுவை, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.