வெல்டன் ஜோதிகா

வெல்டன் ஜோதிகா

Jyothika (99)

டிசம்பர் 19, கடந்த சில வாரங்களுக்கு முன்பு முன்னாள் ஹீரோயின்கள் ரீ என்ட்ரி ஆவது பற்றி எழுதியிருந்தோம். ஒரு காலத்தில் கனவுக் கன்னிகளாக வும், பரபரப்பான நடிகைகளாக வும் இருந்தவர்கள், குடும்ப வாழ்க்கைக்கு சென்று அதற்குரிய கடமை களை முடித்து விட்டு மீண்டும் சினிமாவுக்கு திரும்பும்போது அவர்களுக்கான களம் பரந்து விரிந்து கிடக்கிறது. அவர்கள் பரபரப்பாக இருந்தபோது செய்ய முடியாத பல சாதனைகளுக்கான வாய்ப்பு இப்போது அவர்களுக்கு இருக்கிறது.

இப்போது பணம் முக்கியமில்லை, கிளாமர், அழகு இமேஜை தக்க வைத்துக் கொள்ள வேண்டியதில்லை என்பதால் பல பரீட்சார்த்தமான முயற்சிகளை எடுத்து திறமையை நிரூபிக்கலாம். அதைவிட்டுவிட்டு அம்மா, அண்ணி கேரக்டரில் நடித்தோம், அழுது வடிந்தோம் என்று நடிக்கத் தேவையில்லை என்று குறிப்பிட்டிருந்தோம்.இதோ வந்து விட்டார் ஜோதிகா…

தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த பூசி மெழுகிய தேகம், பப்ளிமாஸ் கன்னம், பெரிய கண்கள் என பத்து வருடங்கள் தமிழ் சினிமாவை தன் உன்னத நடிப்பாலும், அழகாலும் கட்டிப் போட்டவர் ஜோதிகா. அவர் நடித்த எந்தப் படமும் சோடை போனதில்லை. “கிளாமருக்கு நான் லிமிட்டேஷன் வச்சிருக்கேன்” என்று எல்லா நடிகைகளும் சொல்வார்கள். ஆனால் அந்த லிமிட்டேஷனை கடைசி வரை காப்பாற்றியவர் ஜோதிகா.

குஷி, பேரழகன், சந்திரமுகி, மொழி ஆகிய படங்களை தேசிய விருது தவறவிட்டது அதன் குற்றமே தவிர ஜோதிகாவின் குற்றமல்ல. காக்க காக்க மாதிரி கமர்ஷியல் படமாக இருந்தாலும் சரி, தெனாலி மாதிரி காமெடி படமாக இருந்தாலும் சரி, லிட்டில் ஜான் மாதிரி ஃபேன்டசி படமாக இருந்தாலும் சரி, முகவரி மாதிரி கதைப் படமாக இருந்தாலும் சரி, மொழி மாதிரி உணர்வைக் கொட்டும் படமாக இருந்தாலும் சரி, அதில் தன்னை பலமாக நிலைநிறுத்திக் கொண்டவர் ஜோதிகா.

7 படங்களில் தன்னுடன் நடித்த சூர்யாவை 7 வருடங்கள் காதலித்து, காதல் ரகசியம் காத்து திருமணம் செய்து கொண்டது சந்தோஷம்தான். ஆனால் அவர் சினிமாவை விட்டு விலகியது ஏமாற்றமே. அவர் விலகிய பிறகும் அவருக்கான இடத்தை யாரும் பிடிக்க முடியவில்லை. அது காலியாகவே இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இதோ இப்போது தன் இடத்தை தானே நிரப்ப வந்துவிட்டார் ஜோதிகா.

மஞ்சு வாரியர் நடித்து கேரளாவில் வெற்றிபெற்ற ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படத்தின் ரீமேக்கில் தனது பயணத்தை தொடங்கிவிட்டார் ஜோதிகா. ஜோதிகா நடிப்பதை சூர்யா தடுக்கிறார் என்கிற வதந்திகளை உடைப்பது மாதிரி அமைந்திருக்கிறது சூர்யாவே அதன் தயாரிப்பாளர் என்பது. நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு பெண் வாழ்க்கையில் போராடி சாதிக்கிற கதைதான் ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’. நடுத்தர வயதில் இருக்கும் ஜோதிகாவால் நிஜத்திலும் நிறைய சாதிக்க முடியும்.

சினிமாவில் அவர் செய்திருக்க வேண்டிய, செய்யத் தவறிய பல வேலைகள் பாக்கி இருக்கிறது. நடிப்பில் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்த வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. உருகி உருகி காதல், மரத்தைச் சுற்றி டூயட், ஹீரோவுக்காக பல்லிளித்து, அழுது வடிந்து என வழக்கமான ஹீரோயின் வேலைகளிலிருந்து தன்னை முற்றிலும் வித்தியாசப்படுத்தி, ஒரு நடிகையால் இந்த உயரத்தையும் தொட முடியும் என்று காட்ட வேண்டிய நேரம் ஜோதிகாவுக்கு வந்திருக்கிறது. அதை அவர் செய்வார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அதன் தொடக்கமே ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’. அவருக்கு சிறகு கட்டி பறக்க விட்டிருக்கும் சூர்யாவுக்கும், அவரது குடும்பத்திற்கும் நன்றி.வெல்டன் ஜோதிகா!